பாரிஸ்: ஸ்பானியக் காற்பந்துக் குழுவான ரியால் மட்ரிட்டும் இங்கிலிஷ் குழுவான லிவர்பூலும் நடப்பு பருவத்தில் மூன்றாவது வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்பில் நாளை அதிகாலை நடைபெறஉள்ள சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன.
இப்பருவத்தில் ஏற்கெனவே லா லீகா, ஸ்பானிய சூப்பர் கிண்ணம் என இரண்டு கிண்ணங்களைக் கைப்பற்றியுள்ள ரியால் மட்ரிட், லிவர்பூலுக்குச் சவாலாக இருக்கும்.
ஆயினும் சாம்பியன்ஸ் லீக் தொடரில், ரியால் கடைசி நேர கோல்களால்தான் பெரும்பாலும் தப்பியது. அதிலும் குழு நிலை ஆட்டமொன்றில் சொந்த மண்ணில் ஷெரிப் டிராஸ்போல் குழுவிடம் தோற்றது.
காலிறுதிக்கு முந்திய சுற்றில் 2-0 என்ற ஒட்டுமொத்த கோல்கணக்கில் பின்தங்கியிருந்த ரியாலை, பென்சிமாவின் இரட்டை கோல் காப்பாற்றியது.
செல்சிக்கு எதிரான காலிறுதியிலும் பென்சிமாவின் கடைசி நேர கோல்தான் கைகொடுத்தது. அரையிறுதியில் சிறப்பாக விளையாடிய ரியால், சிட்டியை வீழ்த்தியது.
ஆனால், பிரிமியர் லீக் கிண்ணத்திற்கான போட்டியில் சிட்டி குழுவிற்குக் கடைசி வரை சவாலாக இருந்த லிவர்பூல், அவ்வளவு எளிதில் கிண்ணத்தை ரியால் மட்ரிட்டிற்கு விட்டுக்கொடுத்துவிடாது.
இப்பருவத்தில் லிவர்பூலின் எழுச்சி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
அதிலும் மானேவும் சாலாவும் ஆப்பிரிக்க கிண்ணத்திற்காக சென்றுவிட்டபோது லிவர்பூலின் கதை முடிந்தது என்றுதான் பலரும் நினைத்தனர்.
ஆனால், லிவர்பூல் நிர்வாகி கிளோப்பின் வியூகங்கள், அவர் களமிறக்கிய இளம் வீரர்கள், சரியான நேரத்தில் வீரர்களுக்கு ஓய்வு என அனைத்தும் அவருக்கு வெற்றியைக் கொண்டு சேர்த்தன.
அதிலும் கடைசி 10 லீக் ஆட்டங்களில் 8 வெற்றி, 2 சமநிலை என்ற முடிவுகள் அக்குழுவிற்குத் திருப்புமுனையாக அமைந்தது.
பல தடைகளைத் தாண்டி எழுச்சி கண்டுள்ள லிவர்பூல், நாளைய ஆட்டத்தில் ரியாலை வீழ்த்தி கிண்ணத்தை வென்றால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

