செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f5c34de7-0d8d-444d-9e6b-ab14d692f7e3
-

உணவு உற்பத்திக்கு $115 மி. நிதி

கோலாலம்பூர்: மலேசியாவின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அரசுக்குச் சொந்தமான உணவு உற்பத்தி நிறுவனமான ஃபெல்கராவிற்கு 368 மில்லியன் ரிங்கிட் (115 மில்லியன் வெள்ளி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் மஹ்திசீர் காலித் சொன்னார். "கால்நடைகளின் விலை உயர்வுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. கால்நடை தீவன உற்பத்தியை அதிகரிக்க ஃபெல்க்ரா திட்டமிட்டுள்ளது," என்று அவர் சொன்னார்.

33 நாடுகளில் 650 பிள்ளைகளுக்கு கல்லீரல் அழற்சி

ஜெனிவா: கல்லீரல் அழற்சி நோயால் உலகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 26ஆம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் 33 நாடுகளில் 650 பிள்ளைகள் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 99 சம்பவங்கள் இன்னமும் உறுதிப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நோய்க்கு ஆளான ஒன்பது பிள்ளைகள் மாண்டுவிட்டனர்.

அதிகரித்து வரும் இந்நோய்க்கான காரணம் குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். கொவிட்-19 பாதிப்பிற்கும் இந்நோய் தாக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் ஆராயப்படுகிறது.

நோய் எதிர்ப்புத்திறன் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு இந்த நோய் அதிகம் பரவும் சாத்தியம் உள்ளதாக அமெரிக்கச் சுகாதார அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர்.

பயிற்றுவிப்பாளர் விபத்தில் மரணம்

சிங்கப்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற சிங்கப்பூர் 'சிலாட்' தற்காப்புக் கலை குழுவின் பயிற்றுவிப்பாளரான மொகமத் இக்‌ஷான் நூர் ரோமதான் இந்தோனீசியாவின் பாலித் தீவில் நடந்த கார் விபத்தில் மாண்டுவிட்டார். போட்டிகளுக்குப் பிறகு, விடுமுறைக்காக அவர் இந்தோனீசியா சென்றிருந்தார். அவரது மனைவி, பிள்ளைகள் லேசான காயத்துடன் தப்பினர். இந்தோனீசியரான அவர், 8 ஆண்டுகளாக சிங்கப்பூர் குழுவிற்காக பணியாற்றினார். இவ்வாண்டு போட்டியில் சிங்கப்பூர் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றது.