ஈராக்கில் மூக்கிலிருந்து ரத்தம் கசிந்து மரணத்துக்கு இட்டுச் செல்லும் காய்ச்சல்

ஈராக்கில் மூக்கிலிருந்து ரத்தம் கசிந்து மரணத்துக்கு இட்டுச் செல்லும் காய்ச்சல்

1 mins read
4e16e9eb-fc92-405d-b122-f2176b509a10
பாதுகாப்புக் கவச ஆடைகள் அணிந்த ஈராக்கின் சுகாதாரத் துறை ஊழியர்கள் விலங்குகளின் மேலே கிருமிநாசினிகளைத் தெளித்து வருகின்றனர்.  -

ஈராக்கில் மூக்கிலிருந்து ரத்தம் கசிந்து மக்கள் சாகக் கூடிய அளவுக்கு மோசமான காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது.

கிரைமியன்-கோங்கோ ரத்தக்கசிவுக் காய்ச்சல் என்ற அந்தக் காய்ச்சல் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடியது.

இந்த ஆண்டு ஈராக்கில் 111 பேருக்கு அந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அவர்களில் 19 பேர் உயிர் இழந்துவிட்டனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.

இந்த கிருமித்தொற்றுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை. நோய் விரைவாக முற்றக்கூடியது.

உடலில் உள்ளேயும் வெளியேயும், குறிப்பாக மூக்கிலிருந்து, ரத்தக் கசிவு ஏற்படும்.

நோய் தொற்றியவர்களில் 40 விழுக்காட்டு பேர் வரை இறக்கக் கூடும் என்று மருத்துவ உதவியாளர்கள் கூறுகின்றனர்.

ஆடு, மாடு, எருமை போன்ற விலங்குகளின் தோலில் உள்ள உண்ணிகள் இந்தக் கிருமியைப் பரப்புகின்றன.

உண்ணி கடித்து விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் கிருமி பரவுகிறது. அதே போல விலங்குகளை அறுக்கும்போது அவற்றின் திசுக்களோ ரத்தமோ பட்டால்கூட மனிதர்களுக்குக் கிருமி பரவலாம்.

கொவிட்-19 தொற்றுடன் ஒப்பிடும்போது தொற்று எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்றாலும் ஈராக்கிய அதிகாரிகள் கிருமிப்பரவல் பற்றிய கவலையில் உள்ளனர்.

கிருமித்தொற்றைத் தடுக்க, ஈராக்கின் சுகாதாரத் துறை ஊழியர்கள் விலங்குகளின் மேலே உண்ணி உள்ள இடங்களாகப் பார்த்து கிருமிநாசினிகளைத் தெளித்து வருகின்றனர்.