கல்வி, சுதந்திரத்திற்காக போராடிய ஆஃப்கானிஸ்தான் பெண்கள்
காபூல்: தலிபான் அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், "உணவு, வேலை, சுதந்திரம்" என்று முழக்கமிட்டனர். கல்வி அமைச்சின் முன் கூடியிருந்த அவர்கள், பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்றனர். குறுகிய தூரத்திற்குப் பேரணி சென்ற அவர்களை சீருடை அணியாத தலிபான் அதிகாரிகள் தடுத்தனர்.
ஆஃப்கானிஸ்தானில் அரசாங்கத்தை தலிபான் இயக்கம் கைப்பற்றியது முதல், அந்நாட்டு பெண்கள் கடந்த
20 ஆண்டுகளாக அடைந்து வந்த பல முன்னேற்றங்கள் தடை செய்யப்பட்டன.
பெய்ஜிங்கிலும் தளர்வுகள்
பெய்ஜிங்: பெய்ஜிங்கில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்து உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து, கடைத்தொகுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின. ஷாங்காய் நகரில் நாளை மறுநாள் முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகள் கைவிடப்படும்.
அத்துடன், வர்த்தக ஆதரவு திட்டங்களையும் அது அறிவித்துள்ளது. அதன்படி, கார் மீதான வரிகள் குறைத்தல், நிலச் சொத்து தொடர்பான ஒப்புதல்களை விரைவுபடுத்துவது, சிறு வர்த்தக கடன்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அது மேற்கொண்டுள்ளது.
இந்தோனீசியாவில் படகு விபத்து; 25 பேரைக் காணவில்லை
ஜகர்த்தா: இந்தோனீசியாவில் நிகழ்ந்த படகு விபத்தில் 25 பேரைக் காணவில்லை. தெற்கு சுலாவேசியின் பாவோடிர் துறைமுகத்தில் இருந்து 42 பயணிகளுடன் புறப்பட்ட படகு பங்கஜெனி மாவட்டத்தில் உள்ள துறைமுகம் நோக்கி சென்றது.
அப்போது கடலில் பெரிய அலைகள் எழுந்துள்ளன. இதில் கப்பலின் இயந்திரம் பழுதடைந்துவிட்டதால், படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.
உடனடியாக தேடுதல், மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதுவரை 17 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 25 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மூத்த அதிகாரி வாஹித் என்பவர் கூறியுள்ளார்.
படகு கவிழ்ந்த பகுதிக்கு 45 மீட்பு பணியாளர்களுடன் மீட்புக் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது. இதுதவிர, விமானம், ஹெலிகாப்டர் ஒன்றும் தேடுதல் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

