வாஷிங்டன்: உயிரைப் பறிக்கும் துப்பாக்கிப் போன்ற ஆயுதங்களுக்குத் தடை விதிக்கப்படவேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அண்மையில் நடந்த பள்ளிக்கூடம், பேரங்காடி என இரண்டு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களையடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மே 14ஆம் தேதி நடந்த பேரங்காடி துப்பாக்கிச்சூட்டில் மாண்ட 86 வயது நபரின் இறுதிச் சடங்கில் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அடுத்த பத்து நாள்களில் டெக்சஸ் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 19 பிள்ளைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
"இதுவரை பொறுமையாக இருந்தது போதும். துப்பாக்கிக் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் இது.
"நம் நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. அதற்கு தேவையானதை செய்ய நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்," என்றார்.
ஆனால், குடியரசுக் கட்சியின் டிரம்ப்போ, "துப்பாக்கிகளைத் தடை செய்வது இதுபோன்ற சம்பவங்களுக்குத் தீர்வாகாது. துப்பாக்கி இல்லையென்றால் நல்லவர்கள் எப்படி தீயவர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்வார்கள். எனவே, பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்," என்கிறார்.

