சிட்னி: பசிஃபிக் வட்டாரத்தில் சீனா அரசதந்திர ரீதியில் தனது ஆதிக்கத்தைத் அதிகரித்துள்ளபோதும், தமது அரசாங்கம் அந்நாடுகளுடனான தொடர்புகளை மேம்படுத்துவதை அவை வரவேற்பதாக ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆண்டனி அல்பனிஸ் கூறியுள்ளார்.
ஃபிஜிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, அந்நாட்டின் தலைவரையும் மற்ற பசிஃபிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் சந்தித்தார். இந்நிலையில், ஸ்கைநியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அல்பனிஸ் இதனைத் தெரிவித்தார்.
சாலமன் தீவுகளில் சென்ற வியாழக்கிழமை தனது பயணத்தைத் தொடங்கினார் வாங் யி. சென்ற வாரம் கசிந்த ஆவணங்களின்படி, அத்தீவுடனான ஐந்தாண்டு திட்டம் குறித்து அப்போது அவர் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் பசிஃபிக் பகுதிகளில் தமது பாதுகாப்பு, பொருளாதார ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் திட்டத்தைப் பற்றி அந்த ஆவணங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

