ரஷ்யாவுக்கு எதிராக பதில் தாக்குதலைத் தொடங்கியது உக்ரேன்
கியவ்: ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்துள்ள முக்கிய தென் நகரான கெர்சனில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரேனிய ராணுவத்தினர் பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.
கிழக்கு உக்ரேனை தன்வசமாக்க ரஷ்யா எடுத்துவரும் முயற்சிகளைத் தகர்த்தெறியும் விதமாக உக்ரேனின் இந்த ராணுவ நடவடிக்கை அமைகிறது.
ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலைப் பலப்படுத்தும் வகையில் டென்மார்க்கின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளும் அமெரிக்காவின் தானியக்க ஹவிட்சர் ஏவுகணைகளும் உக்ரேனைச் சென்றடைந்து உள்ளன.
அத்தகைய ஆயுதங்களைப் பெற முன்னதாக கோரிக்கை விடுத்திருந்த உக்ரேனிய அதிபர் வொலோடமிர் ஸெலன்ஸ்கி, கார்கிவ் நகருக்கு அருகே நாட்டின் வடகிழக்குப் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார்.
கார்கிவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ரஷ்யப் படைகளை விரட்டியடிக்கும் முயற்சியில் இந்த மாதம் உக்ரேனியப் படைகளுக்கு வெற்றி கிட்டியது. அதற்கு அவர் பாராட்டு தெரிவித்திருந்தாலும், ஆக்கிரமிப்பாளர்களால் கார்கிவ்வுக்குக் கடும் சேதம் ஏற்பட்டு இருப்பதைச் சுட்டினார்.
திரு ஸெலன்ஸ்கி புறப்பட்ட சில மணி நேரத்தில் கார்கிவ் மீண்டும் தாக்குதலுக்கு இலக்கானது. என்றாலும், நீண்டகாலத்திற்கு ரஷ்யா பெரும் விலையைச் செலுத்தும் என்று அதிபர் ஸெலன்ஸ்கி கூறினார்.
"கார்கிவ், கியவ், வட உக்ரேனைக் கைப்பற்றுவதற்கான போரில் மட்டும் ரஷ்யா தோற்கவில்லை. தனது சொந்த எதிர்காலத்தையும் உலகத்துடனான கலாசாரத் தொடர்பையும் அது இழந்துவிட்டது.
ரஷ்யப் படைகளுக்கு எதிரான உக்ரேனிய ராணுவத்தினரின் பதில் தாக்குதல், போரின் புதியதோர் அத்தியாயத்தைக் குறிக்கிறது. அந்தப் போர், உக்ரேனின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அரசியல், பொருளியல், மனிதாபிமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு ரஷ்யப் படைகள் கிரிமியாவுக்கு வடக்கே ஆக்கிரமிப்பைத் தொடங்கியதை அடுத்து, கெர்சன் நகர்தான் முதலில் வீழ்ந்தது. அந்தநகரைத் தளமாகக் கொண்டு தெற்கு உக்ரேனில் ராணுவ நடவடிக்கைகளைப் பலப்படுத்த ரஷ்யப் படைகள் திட்டமிட்டன.
அண்மைய வாரங்களாக தெற்கில் தற்காப்பைப் பலப்படுத்த ரஷ்யப் படைகள் கவனம் செலுத்தி வந்துள்ளன. ஆனால், கெர்சன் நகரில் தற்காப்பைப் பலப்படுத்துவதில் ரஷ்யா தடுமாறுவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டி உள்ளன.

