கோலாலம்பூர்: மலேசியாவுக்கு ஆண்டிறுதிக்குள் ஏறக்குறைய 52,000 வெளிநாட்டு ஊழியர்கள் வருவார்கள் என மலேசிய செம்பனை எண்ணெய்ச் சங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால், செம்பனை எண்ணெய் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் மலேசியாவில் எண்ணெய் உற்பத்தி மீட்சியடைய இது போதாது என சங்கம் எச்சரித்து உள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக ஊழியர் பற்றாக்குறை மோசமடைந்தது. இதனால் செம்பனைத் தோட்டங்கள் செம்பனை பழத்தை அறுவடை செய்ய சிரமப்படுகின்றன.
மலேசியத் தோட்ட ஊழியரணியில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் வெளிநாட்டு ஊழியர்கள். அவர்களில் பெரும்பாலானோர் இந்தோனீசியர்கள்.
ஊழியர் பற்றாக்குறையால் மலேசியாவில் செம்பனை எண்ணெய் உற்பத்தி பல ஆண்டுகளில் காணப்படாத அளவுக்கு குறைந்து உள்ளது.
செம்பனை எண்ணெய்யை உற்பத்தி செய்யும் ஆகப்பெரிய நாடான இந்தோனீசியா ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளதாலும் ரஷ்யா-உக்ரேன் போராலும் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை உலகம் எதிர்நோக்குகிறது.
2020ல் எல்லைகள் மூடப்படுவதற்கு முன்பு 20,000 ஊழியர்கள் மலேசியா வருவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்ததாக மலேசிய செம்பனை எண்ணெய் சங்கத் தலைமை நிர்வாகி நஜிப் வஹாப் தெரிவித்தார். அதுபோக, ஊழியர் பற்றாக்குறையைப் போக்க 32,000 ஊழியர்களின் வருகைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் மலேசியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
"நாங்கள் ஏற்கெனவே சிரமமான நிலையில் இருந்து வருகிறோம்," என்று கூறிய திரு நஜிப், தற்போதைய ஊழியர் பற்றாக்குறை 100,000க்கும் மேல் இருக்கலாம் என்றார்.
ஜூலைக்குள் பெரிய எண்ணிக்கையிலானோர் மலேசியாவுக்கு வருவர் என அவர் உறுதியாகக் கூறினார்.
2020 ஏப்ரலில் செம்பனை எண்ணெய்த் துறையில் 337,000 வெளிநாட்டு ஊழியர்கள் வேலை செய்தனர்.
ஆனால், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பலரும் தாயகம் திரும்பினர். எல்லைக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்ததால் மலேசியா வரவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கொவிட்-19 சூழல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து, கடந்த மாதம் மலேசியா எல்லைகளை மீண்டும் திறந்தது.

