பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஆடவர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அதை அவர் புறக்கணித்ததால் அவருடைய அண்டைவீட்டார் ஆயிரக்கணக்கானோருக்குத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தொற்று அபாயம் அதிகம் இருப்பதாகக் கருதப்படும் கடைத்தொகுதிக்கு அந்த ஆடவர் சென்று வந்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமை உத்தரவை நிறைவேற்ற அவர் தவறியதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
"இல்லத் தனிமை உத்தரவின்போது அவர் பலமுறை வெளியே சென்று வந்தார். அக்கம்பக்க பகுதிகளில் அவர் நடமாடினார்," என்று பெய்ஜிங் பொதுப் பாதுகாப்பு அதிகாரி பான் ஸுஹோங் கூறினார்.
40களில் உள்ள அந்த ஆடவருக்கும் அவருடைய மனைவிக்கும் பின்னர் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து, அவர்களுடைய அண்டைவீட்டார் 5,000 பேருக்குத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 250 பேர் அரசாங்க தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
பெய்ஜிங்கில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் சமயத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

