உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தைச் சேதப்படுத்தியுள்ளார் ஒரு ஆடவர். புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரும் அறிவியலாளருமான லியொனார்டோ டா வின்சி 16 ஆம் நூற்றாண்டில் வரைந்த உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்று மோனாலிசா ஓவியம்.
இது பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அருங்காட்சியகத்திற்கு சக்கரநாற்காலியில் மூதாட்டி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (மே 29) அன்று வந்துள்ளார்.
மோனாலிசா ஓவியம் அருகே சக்கர நாற்காலியில் வந்த அவர் திடீரென குதித்து எழுந்தார். அப்போது அது மூதாட்டி அல்ல பெண் வேடமிட்டிருந்த ஆண் என்று தெரியவந்தது.
மோனாலிசா ஓவியம் அருகே சென்ற அவர் ஓவியத்தின் மீது கேக்கை பூசினார். உடனடியாக சுதாரித்து கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு இருந்து அவரை அழைத்து சென்றனர். நல்ல வேளையாக ஓவியத்தின் மேல் பாதுகாப்புக்காக கண்ணாடி ஒன்று இருந்ததால் ஓவியத்துக்கு சேதம் ஏற்படவில்லை.
உலகச் சுற்றுச்சூழல் பாதுகப்புக்கான விழிப்புணர்வுக்காக அந்த 36 வயது ஆடவர் அந்தச் செயலைச் செய்துள்ளார் என்று அறியப்படுகிறது. அந்த ஆடவர் தற்போது மனநல காப்பகத்தில் உள்ளார் என்று பிரஞ்சு காவல் துறை தெரிவித்தது.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அங்கு இருந்த பார்வையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

