ஹாங்காங்: மதுபானக் கூடங்களில் கிருமிப் பரவல் குழுமங்கள் அதிகரித்துள்ளதால் ஜூன் மாதம் திட்டமிட்டதுபோல் கிருமிப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தளர்த்து வது சாத்தியமில்லை என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறியுள்ளார்.
இறுதிக்கட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தால் இடத்தின் முழு கொள்ளளவையும் மக்கள் பயன்படுத்துவதோடு மதுபானக் கூடங்களில் இசை நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கும் அனுமதி வழங்கப் பட்டிருக்கும் என்று திருமதி லாம் பொது ஊடக சந்திப்பின்போது கூறினார். மேலும், தற்போது தினந்தோறும் 200 அல்லது 300 பேருக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதியாகும் நிலையில் அவசரப்பட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் உயிரிழப்பு ஏற்பட நேரிடும் என்றும் அவர் எச்சரித் தார். இதையடுத்து, அண்மையில் ஏற்கெனவே சமூகத்தில் 10 கிருமித்தொற்றுக் குழுமங்கள் இருப்பதாகவும் அவற்றில் இரண்டு மதுபானக்கூடக் குழு மங்களும் அடங்கும் என்பதால் அரசாங்கம் மிகவும் கவனமான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
தற்போது ஹாங்காங்கில் மக்கள் கூடும் இடங்களில் 75% இட அளவைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதுடன் மேசைக்கு நான்கு பேர் என்ற கட்டுப்பாடும் உள்ளது.

