வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் உவால்ட நகரின் ரோப் என்ற பள்ளிக்
கூடத்தில் சிறுவர்கள் உட்பட 21 பேரை துப்பாக்கி ஏந்திய பதின்ம வயது வாலிபன் ஒருவன் சுட்டுக்கொன்றான். இதன் தொடர்பில் துப்பாக்கிகளை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் பைடனுக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
இது குறித்து கருத்துரைத்த அதிபர் பைடன், துப்பாக்கி
களைக் கட்டுப்படுத்துவது பற்றி அறிவுபூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு தான் வலியுறுத்தப் போவதாகக் கூறினார்.
"துப்பாக்கிகளைக் கட்டுப்
படுத்துவது தொடர்பாக நான் எப்பொழுதுமே முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளேன். அதை தொடர்ந்து செய்வேன்," என்று வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
"இதில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதால் இது குறித்து அனைவரும் அறிவுபூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அதுவே எனக்கு நம்பிக்கையளிக்கிறது," என்று அவர் விளக்கினார்.
அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளான குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் விடுமுறை நாளான திங்கள்கிழமையிலும் துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்துவதில் இணக்கம் காணும் வழிமுறைகளை ஆராய்ந்ததாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள் துப்பாக்கி வாங்க குறைந்தபட்ச வயது வரம்பு, ஆபத்தானவர்கள் என போலிசார் கருதுவோரிடமிருந்து துப்பாக்கிகளைப் பறித்துக்கொள்வது போன்றவை பற்றி இரு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், துப்பாக்கிகள் வாங்குவதை முற்றிலும் தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று கூறப்படு கிறது.
முன்னதாக, டெக்சஸ் மாநிலத்தின் உவால்ட நகருக்கு அதிபர் ஜோ பைடன் வருகை புரிந்தார்.

