மாஸ்கோ: உக்ரேனியப் போரில் ரஷ்யப் படையினர் இதுவரை சியவிரோடோனெட்ஸ் என்ற நகரின் மூன்றில் ஒருபகுதியைக் கைப்பற்றியுள்ளனர்.
எனினும், இந்த நகரை முழுமையமாகக் கைப்பற்றும் முயற்சியில் அந்நாடு மேற்கொண்ட தாக்குதல் எதிர்பார்த்ததைவிட அதிக நாள் பிடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதை அங்குள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற போராளிகளின் தலைவர் ஒருவர் தெரிவித்திருப்பதாக மாஸ்கோவின் அதிகாரபூர்வ டாஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இங்கு ரஷ்யா மேற்கொண்டுள்ள தீவிரமான தாக்குதலால் சியவிரோடோனெட்ஸ் நகரின் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், நகரின் தென்கிழக்கு, வடகிழக்குப் பகுதிகளில் ஊடுருவியுள்ள ரஷ்யப் படையினரின் முன்னேற்றத்தை உக்ரேனிய ராணுவம் தனது தற்காப்பு உத்திகளால் மெதுவடைய வைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
"சியவிரோடோனெட்ஸ் நகரின் மூன்றில் ஒரு பகுதி எங்கள் வசம் உள்ளது என்று நான் சொல்வேன்," என்று லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு என்ற போராளிக் குழுவின் தவைன் லியோனிட் பாசெச்னிக் நேற்று கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் விளக்கியது.
சியவிரோடோனெட்ஸ் நகரில் சண்டை மிக உக்கிரமாக நடப்பதாக அவர் தெரிவித்ததாக டாஸ் விவரித்தது.
எனினும், ரஷ்யப் படையினர் எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற முடியவில்லை என்று அவர் கூறியதாக டாஸ் தெரிவித்தது.
அந்த நகரில் பல ரசாயன ஆலைகள் இருப்பது ரஷ்யப் படையினரின் முன்னேற்றத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக டாஸ் நேற்று கூறியது.
பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரஷ்யா உக்ரேன் மீது தனது தாக்குதலை தொடுத்தபோது உக்ரேனின் லுஹான்ஸ்க் பகுதியை சுதந்திர நாடாக அறிவித்தது.
இதை உக்ரேனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
ரஷ்யா, தனது ஆதரவு போராளிக் குழுக்களின் சார்பாக உக்ரேனின் டோன்பாஸ் மாநிலத்தில் உள்ள லுஹான்ஸ்க், டோனெட்ஸ் பகுதிகளை தனது கைவசம் கொண்டுவர பெரும் முயற்சி எடுத்துள்ளது. ஆனால், இது எதிர்பார்த்த பலனைத் தந்ததாகக் கூறமுடியாது.

