கெர்சன் (உக்ரேன்): ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட உதவியாக மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கி வந்துள்ளன. ஆனால் அவை வழங்கும் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனின் ராணுவ வீரர்களுக்குப் போதுமான பயற்சி இல்லாமல் இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
"உதாரணமாக, 'ஐஃபோன் 13' திறன்பேசி வழங்கப்பட்ட ஒருவர் அதைத் தொலைபேசி அழைப்புகளுக்காக மட்டும் பயன்படுத்துவது போன்ற சூழல் உருவெடுத்துள்ளது," என்று உக்ரேனின் ராணுவப் படைத் தளபதி ஒருவர் கூறினார்.
போர் தொடங்கி 100 நாள்களுக்கும் மேல் ஆன நிலையில் இன்னும் பல ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கப்போவதாக மேற்கத்திய நாடுகள் உறுதியளித்துள்ளன.
இதற்கிடையே, மரியபோல் நகரில் சரணடைந்த 1,000க்கும் அதிகமான உக்ரேனிய ராணுவ வீரர்கள் விசாரணைக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சொல்லும் செய்தி வெளியாகியுள்ளது.
அது உறுதிப்படுத்தப்பட்டால் ஏற்கெனவே சவாலாக இருந்து வந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மேலும் சிக்கலாகலாம் என்று அஞ்சப்படுகிறது.
அதோடு, உக்ரேனைச் சேர்ந்த மேலும் பல போர்க் கைதிகள் ரஷ்யாவுக்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

