பிரிட்டிஷ் அரசியாருக்கு அதிபர் ஹலிமாவின் பிறந்தநாள் வாழ்த்து
சிங்கப்பூர்: பிரிட்டிஷ் அரசியார் தமது 96வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துக்கொண்டார்.
"சிங்கப்பூர் மக்களின் சார்பாக பிரிட்டிஷ் அரசியாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று அதிபர் ஹலிமா தெரிவித்தார்.
அமெரிக்காவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரிப்பு
சிக்காகோ: அமெரிக்காவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பரிசோதனை ஆற்றலை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தனியார் ஆய்வுக்கூடங்களிலும் குரங்கம்மைப் பரிசோதனைகளை நடத்த தேவையான ஏற்பாடுகளை அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் செய்து வருகிறது.
இதுவரை 16 அமெரிக்க மாநிலங்களில் 45 பேருக்குக் குரங்கம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 300 குரங்கம்மைப் பரிசோதனைகளை அமெரிக்கா நடத்தியுள்ளது.
அமெரிக்காவில் குரங்கம்மை பரிசோதனைகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 45 விழுக்காடு அதிகரித்தது.
காரில் இருந்தபோது பரவிய நோய்; பெண்ணுக்கு $7.2 மி. இழப்பீடு
லாஸ் ஏஞ்சலிஸ்: தமது காதலரின் காரில் அவருடன் பாலியல் உறவு கொண்ட பெண்ணுக்குப் பாலியல் ரீதியாகப் பரவும் நோய் தொற்றிக்கொண்டது. இதையடுத்து, அந்த காருக்கு வாகன காப்புறுதித் திட்டம் வழங்கியிருந்த காப்புறுதி நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு $5.2 மில்லியன் அமெரிக்க டாலர் ($7.2 மில்லியன்) இழப்பீடு வழங்கியுள்ளது.
தமது காதலர் அவருக்கே தெரியாமல் நோயைத் தமக்குப் பரப்பியதாகவும் அவர் வாங்கிய வாகன காப்புறுதி திட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடி காயங்களுக்கும் இழப்புகளுக்கும் இழப்பீடு தர வேண்டும் என்று அப்பெண் முன்வைத்த வாதத்தை மிசோரி மாநில நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
சிரியாவைத் தாக்கிய இஸ்ரேல்
டமாஸ்கஸ்: இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் மிக மோசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓடுபாதை சேதமுற்றதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

