இலங்கையில் பங்கீடு செய்து எரிவாயு விநியோகிக்கப்படும்

இலங்கையில் பங்கீடு செய்து எரிவாயு விநியோகிக்கப்படும்

2 mins read
4d6c9a03-e3e8-4c36-9142-9428294f3b1e
ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரான லசாந்தா தீப்தி, பல மணி நேரம் காத்திருந்து தமது வாகனத்தில் எரிவாயுயை நிரப்பினார். படம்: ஏஎஃப்பி -

பொருளியல் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கை, பெட்ரோலை பங்கீடு செய்து மோட்டார் வாகனமோட்டிகளுக்கு விநியோகிக்க உள்ளது.

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு மோசமாகியுள்ளது. தற்போது இயங்கிவரும் வெகுசில எரிவாயு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் மணிக்கணக்காகக் காத்துக் கிடக்கின்றனர்.

இவ்வேளையில் இலங்கை அரசாங்கம், ஒரு வாரத்துக்கு வாங்கும் எரிவாயுவைக் கட்டுப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றது.

மின்சக்தி, எல்பிஜி எரிவாயு பற்றாக்குறை ஆகியவற்றால் பெட்ரோல், டீசலை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதே நேரம், தேவையான எண்ணெய்யை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என்று எரிவாயுத் துறை அமைச்சர் காஞ்சனா விஜயசேகரா கூறினார்.

அதனால் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பதிவு செய்து, அவர்களுக்கு பங்கீட்டு அடிப்படையில் பெட்ரோல் வழங்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது.

ஜூலை முதல் வாரத்துக்குள் இது நடப்புக்கு வரக்கூடும் என்று திரு காஞ்சனா கூறினார்.

வாடிக்கையாளர்களுக்கு வாரம் எவ்வளவு பெட்ரோல் ஒதுக்கப்படும் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே ரஷ்யாவிடமிருந்து இலங்கை கூடுதல் எண்ணெய்யை வாங்கும் சூழ்நிலை உருவாகலாம் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

முதலில் மற்ற நாடுகளை இலங்கை நாடும். ஆனால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை இலங்கை வாங்கும் சாத்தியத்தை மறுப்பதற்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஏற்கெனவே ரஷ்யாவிடமிருந்து சிறிய அளவில் எண்ணெய்யை இரண்டு வாரத்துக்கு இறக்குமதி செய்தது.