பாரிஸ்: பிரான்சின் நாடாளுமன்ற மேலவையான தேசியப் பேரவைக்கான முதல் கட்டத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அத்தேர்தலில் புதிய இடதுசாரிக் கூட்டணிக்கு ஆதரவு வலுத்துள்ளது.
அதிபர் இமானுவல் மெக்ரோனின் மையவாதக் கூட்டணிக்கு பெரும்பான்மை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மெக்ரோனின் கூட்டணி 225 முதல் 295 இடங்களைக் கைப்பற்றி வெல்லும் என்று சில ஆய்வு நிறுவனங்கள் முன்னதாக தேர்தல் கணிப்புகள் வெளியிட்டிருந்தன. ஆனால், இப்போது மெக்ரோனின் வெற்றி கேள்விக்குறியாக ஆகியுள்ளது. பெரும்பான்மை இடங்களான 289க்கும் குறைவான இடங்களையே மேக்ரோனின் கூட்டணி கைப்பற்றும் என்று இப்போது கூறப்படுகிறது.
இந்நிலையில், "தங்களுக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கிறது. அதற்குள் சக்திவாய்ந்த பெரும்பான்மையைப் பெற வழிவகுப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பெரும்பான்மை இடங்களைப் பெறும் தகுதியுள்ள ஒரே கூட்டணிதான் எங்கள் கூட்டணி," என்று பிரதமர் எலிசபெத் போர்ன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பின் அதிபர் மெக்ரோனின் கூட்டணி இப்போது கணிசமான இடங்களை இழந்துள்ளது. இது அக்கூட்டணிக்கு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
அக்கூட்டணிக்கு இந்த மேலவைத் தேர்தலில் வெற்றி என்பது எட்டாக் கனியாகிவிட்டது என்று அரசியல் நிபுணர் பிரிஸ் டெய்ன்ஞ்சுரியர் தெரிவித்துள்ளார்.
மெக்ரோனின் இடதுசாரி கூட்டணி வலுவிழந்துள்ள நிலையில், அவருக்கு நாடாளுமன்றத்தில் கூடுதல் வலு தேவைப்படுவதாக அரசியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

