பெய்ஜிங்: பாகிஸ்தானில் சீன நாட்டுத் தொழிலாளிகள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு பாகிஸ்தான் முடிவுகட்ட வேண்டும் என்று சீன ராணுவம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரு நாட்டு ராணுவத் தலைவர்களும் அண்மையில் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவத் தலைமை தளபதி காமர் ஜாவித் பாஜ்வா தலைமையிலான ராணுவக் குழு ஒன்று சீனாவுக்கு கடந்த 9ந்தேதி முதல் 12ந்தேதி வரையில் பயணம் மேற்கொண்டது. அண்மைய காலங்களாக பாகிஸ்தானில் தொடர்ந்து சீனர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் பணியாளர்கள் மற்றும் தளவாடங்கள் கொண்ட வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவு ஒன்றை பாகிஸ்தான் காவல் துறை அலுவலகத்தில் அமைக்க இஸ்லாமாபாத் காவல்துறை முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்களில் பணிபுரியும் தங்கள் நாட்டு மக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சீன ராணுவம், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவித்திடம் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

