மலேசியாவில் உள்ள ஓர் இந்திய சாப்பாட்டுக் கடை அதன் ஏழு கிளைகளில் ஏதாவது ஒன்றில் குறைந்தது ஆறு மாதங்கள் வேலை செய்யும் மலேசியர்களுக்கு ஐஃபோன் கைபேசிகளை வழங்குவதாகக் கூறுகிறத.
அவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 10 ரிங்கிட் சம்பளத்தையும் அளிக்க நிறுவனம் ஆயத்தமாய் உள்ளது.
கண்ணா கறி ஹவுஸ் எனும் அந்த உணவகம் மலேசியாவின் மலே மெயில் செய்தித்தாளிடம் இதைத் தெரிவித்தது.
அந்த உணவகத்துக்கு கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏழு கிளைகள் உள்ளன.
அவற்றில் வேலை செய்த 50 வெளிநாட்டு ஊழியர்கள் கொவிட்-19 பரவல் தொடங்கியபோது சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.
இந்தியா, பங்ளாதேஷ், இலங்கை, நேப்பாளம் ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள் தங்களிடம் பணியாற்றியதாக உணவக நிர்வாகி யோகா கண்ணன் கூறினார்.
இப்போது தொற்றுப் பரவல் ஓய்ந்து, வர்த்தகம் மேம்பட்டு வருகிறது. ஆனால் தேவையான அளவு ஊழியர்கள் இல்லாததால் அன்றாடம் வர்த்தகத்தைச் சமாளிப்பது திண்டாட்டம் ஆகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் பலர் தங்கள் தாய்நாட்டில் வேலைகளைத் தேடிக் கொண்டுவிட்டனர்.
அதனால் உள்ளூர் ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந்து அதை விளம்பரப்படுத்தியது அந்த உணவகம்.
இதுவரை ஐந்து உள்ளூர் ஊழியர்கள் உணவுப் பரிமாறுபவர்களாக வேலைக்குச் சேர்ந்துள்ளனர். குறைந்தது ஆறு மாதங்கள் வேலை செய்த பின்னர் அவர்களுக்குப் பரிசாக ஐஃபோன் எஸ்ஈ கைபேசிகளை வழங்கி உள்ளது.
உள்ளூர்க்காரர்களை ஈர்க்க, வேலை நேரம் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை 5 மணி வரை என்று குறைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் மிகப் பெரிய ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.

