தோக்கியோ: ஜப்பானிய நாடாளுமன்றம் இணையத்தில் அவமதிக்கும் கருத்துகளை வெளியிடுவோருக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டமசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
2020ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளரான 22 வயது ஹனா கிமுரா சமூக ஊடகங்களில் தன்னை அவமதிக்கும் கருத்துகள் வெளியானதால் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து இணையத் துன்புறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், இணையத்தில் அவமதிக்கும் கருத்துகளை வெளியிடுவோருக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனையோ முப்பதாயிரம் 'யென்'($2,200) அபராதமோ விதிக்கப்படும் என்கிறது புதிய சட்டம்.
இதற்கு முன்னர் இத்தகைய குற்றச்செயலுக்கு 30க்கும் குறைவான நாள்கள் தடுத்துவைக்கவோ பத்தாயிரம் 'யென்'($75) வரையிலான அபராதம் விதிக்கவோ மட்டுமே இடமுண்டு. எனவே புதிய சட்டம் குறிப்பிடத்தக்க அளவு தண்டனையில் மாற்றம் கொண்டுவர வகைசெய்யும் என்கின்றனர் ஆதரவாளர்கள்.
ஆனால் இது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும் அதிகாரத்தில் உள்ளோரை விமர்சிப்பதற்குத் தடையாக இருக்கும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். எனவே சட்டம் நடப்புக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இது கருத்துச் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கிறதா என்பது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பொதுவெளியில் ஒருவரது சமூக அந்தஸ்தைக் குறைக்கும் செயல் அவமதிப்பாகக் கருதப்படுகிறது.

