கியவ்: உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்ததன் விளைவாக உக்ரேனில் பண்ணைகள், இயந்திரங்கள் கால்நடை ஆகியவற்றுக்கு US$4.3 பில்லியன் (S$6 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுவிட்டதாக கியவ் பொருளியல் கல்லூரி தெரிவித்து உள்ளது.
"உக்ரேனிய பொருளியல் 45 விழுக்காடு வரை சுருங்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. உக்ரேனிலிருந்து தானியங்களின் ஏற்றுமதிக்குத் தடை ஏற்பட்டுள்ளதால், உலகெங்கும் மில்லியன் கணக்கானோர் பட்டினியால் வாடும் நிலை ஏற்படக்கூடும்," என்று அந்தக் கல்லூரி வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை கூறியது.
உக்ரேனில் முக்கிய வேளாண் உள்கட்டமைப்பு நடுவங்களில் ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதல்களால், உணவுப் பொருள்களுக்குப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.
உக்ரேனின் துறைமுகங்களை ரஷ்யப் படைகள் சுற்றி வளைத்துள்ளதால், நாட்டின் ஏற்றுமதிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், உக்ரேனுக்கு வருவாய் பாதிப்படைந்து உலகளாவிய உணவு நெருக்கடி மோசம் அடையும் நிலை ஏற்படுகிறது.
மில்லியன் கணக்கான டன் தானியங்களும் காய்கறி எண்ணெயும் உக்ரேனில் தேங்கிக் கிடப்பதால் உலகம் முழுவதும் உணவு விலைகள் உச்சத்தை எட்டி உள்ளன.
உக்ரேனிய துறைமுகங்களை மீண்டும் திறந்துவிடுவதற்கான முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை. கடல் கண்ணி வெடிகளை நீக்குவது மாதக்கணக்காகலாம் என ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியுள்ளது.
ரஷ்யா-உக்ரேன் போர் காரணமாக கோழி, வாத்து உட்பட 5.7 மில்லியன் உயிரினங்கள் மடிந்துவிட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
"இந்தப் போர் காரணமாக விவசாயிகள் பண்ணைகளுக்குச் சென்று தீவனம் வழங்கவோ கால்நடைகளைப் பராமரிக்கவோ முடியாததால், ஏராளமான பண்ணை விலங்குகள் மடிகின்றன," என்று ஆய்வறிக்கை கூறியது.
மேலும், உக்ரேனில் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து US$613 மில்லியன் மதிப்பிலான தானியங்கள் திருடப்பட்டு ரஷ்யாவுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

