மாஸ்கோ: ரஷ்யாவில் தொடர்ந்து சேவைகளில் ஈடுபடுத்தப்படும் மேற்கத்திய பயணி விமானங்களின் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆக உயரிய விமானப் போக்கு வரத்து ஒழுங்குமுறை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. அந்த விமானங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் இல்லை. அவற்றின் பராமரிப்பும் சரியில்லை என்று அந்த அமைப்பு அபாய சங்கு ஊதி உள்ளது.
ரஷ்யா, உக்ரேன் மீது படை எடுத்ததை அடுத்து ரஷ்யாவில் சேவையில் ஈடுபட்டு இருக்கும் போயிங், ஏர்பஸ் விமானங்களுக்கான உதிரிப் பாகங்களை ரஷ்யா பெறமுடியாமல் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் பல கட்டுப்பாடுகளை விதித்துவிட்டன.
இவ்வேளையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்ட ஐரோப்பிய ஒன்றிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகவையின் நிர்வாக இயக்குநர் பேட்ரிக் கே, ரஷ்யாவில் சேவையாற்றும் மேற்கத்திய விமானங்கள் பாதுகாப்பு குறைந்தவையாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.
ரஷ்யாவில் சேவையாற்றும் ஐரோப்பிய விமானங்களில் பலவற்றின் விவரங்கள், தகவல்கள் ஒழுங்குமுறை அமைப்பு அதிகாரிகளிடம் இல்லை. அண்மைய மாதங்களில் அந்த விமானங்கள் பாதுகாப்புப் பிரச்சினைகளைச் சந்தித்தது உண்டா என்பதும் தெரியவில்லை என்று அவர் கவலை தெரிவித்தார்.
ஆகையால், ரஷ்யா விடுக்கும் கோரிக்கைகளை ஒவ்வொன்றாகப் பரிசீலித்து விதிவிலக்கு அளிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
உதிரிப் பாகங்கள் கிடைக்காமல் ஒரு விமானத்தில் இருந்து தேவையான பகுதிகளைக் கழற்றி அவற்றை வேறு விமானங்களில் ரஷ்யா பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

