மட்ரிட்: ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகியுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நேற்று முன்தினம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை நெருங்கியது.
பாரிஸ், ரோம், லண்டன் உள்ளிட்ட மற்ற நகர்களில் கடும் வெப்பவானிலைக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.
"இந்த வாரம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் தீவிரமடையும். ஒவ்வொரு நாளும் அது மோசமடையும்," என்று ஃபின்லாந்து வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர் மிகா ரன்டனன் கூறினார்.
இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக ஸ்பெயினில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தாண்டியிருக்கிறது. ஆண்டின் இந்தக் கட்டத்தில் அங்கு இவ்வளவு கடுமையாக வெயில் வாட்டுவது வழக்கத்திற்கு மாறானது.
"வெப்பத் தாக்கத்திற்குப் பருவநிலை மாற்றமே காரணம்," என்று டாக்டர் ரன்டனன் சொன்னார்.
பிரான்சிலும் ஜெர்மனியிலும் குளிரூட்டிகளைப் பயன்படுத்துவதற்கான தேவை அதிகரித்துள்ளதால், மின்சாரக் கட்டணங்கள் ஏறுமுகம் கண்டுள்ளன. பாரிசில் குளிரூட்டிகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. வரும் சனிக்கிழமை அங்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியசை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.