ஆசிய கிண்ண தகுதிச்சுற்று: மூன்று கோல்கள் போட்டு இக்சான் அசத்தல்
பிஷ்கேக்: 2018ல் மொரிஷியஸ் காற்பந்துக் குழுவுக்கு எதிராக நடைபெற்ற நட்புமுறை ஆட்டம் ஒன்றில் சிங்கப்பூருக்காக தன் முதல் கோலைப் போட்ட இக்சான் ஃபாண்டி (படம்), தன் குழுவுக்காக மூன்று ஆட்டங்களுக்கு மேல் கோல் போடாமல் இருந்ததில்லை.
ஆனால், அண்மையில் நான்கு ஆட்டங்களில் கோல் போடாமல் இருந்த அவர், நேற்று முன்தினம் அதை முடிவுக்குக் கொண்டு வந்தார். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டியின் மூன்றாவது தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் மியன்மார் குழுவை 6-2 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோற்கடித்தது. அதில் மூன்று கோல்களைப் போட்டு இக்சான் அசத்தினார்.
கடந்த மார்ச் மாதம் மலேசியாவுக்கு எதிராக நடைபெற்ற நட்புமுறை ஆட்டம் ஒன்றில் 2-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் வென்றிருந்தது. அந்த ஆட்டத்தில் இக்சான் இரு கோல்களையும் போட்டார். அதற்குப் பிறகு நடைபெற்ற நான்கு ஆட்டங்களில் அவர் கோல் எதையும் போடவில்லை.
சிங்கப்பூர் காற்பந்துக் குழு பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்று நான்கு ஆட்டங்களுக்குப் பிறகு முதல் வெற்றியைச் சுவைத்தார் தகாயுகி நிஷிகயா. தாம் இணைந்து பணியாற்றியுள்ள தலைசிறந்த காற்பந்து வீரர்களில் இக்சானும் ஒருவர் என அவர் புகழாரம் சூட்டினார்.
நேஷன்ஸ் லீக்: 1928க்குப் பிறகு சொந்த மண்ணில் இங்கிலாந்து படுதோல்வி
உல்வர்ஹேம்டன்: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் 94 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இங்கிலாந்து படுதோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஹங்கேரியிடம் 4-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து மண்ணைக் கவ்வியது. உலகக் கிண்ணப் போட்டிக்குத் தயாராக இது ஒரு நல்ல ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்த்திருந்த இங்கிலாந்துக்கு இதன் முடிவு பேரிடியாக அமைந்தது.
கடந்த வாரயிறுதியில் நடந்த ஆட்டத்தில் இத்தாலியுடன் 1-1 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து சமநிலை கண்டது. ஹங்கேரிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியில் ஒன்பது மாற்றங்களைச் செய்திருந்தார் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட்.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தினாலும், கோல் போடும் வாய்ப்புகளை அக்குழு அவ்வளவாக ஏற்படுத்தவில்லை. இந்த மாதத் தொடக்கத்தில் இங்கிலாந்தை தன் சொந்த மண்ணில் ஹங்கேரி தோற்கடித்து இருந்தது.
இதுகுறித்து இங்கிலாந்து குழுத் தலைவர் ஹேரி கேன் கூறுகையில், "நீண்டநாளுக்குப் பிறகு நாங்கள் படுதோல்வியைச் சந்தித்துள்ளோம். இது பதற்றம் அடைவதற்கான நேரம் அல்ல. நாங்கள் தலைநிமிர்ந்து இருப்பதற்கான நேரம் இது," என்றார்.
உடற்குறையுள்ளோருக்கான நீச்சல் போட்டி: சிங்கப்பூர் வீராங்கனை வெற்றி
மடீரா: போர்ச்சுகலில் நடைபெற்றுவரும் உடற்குறை உள்ளோருக்கான உலக வெற்றியாளர் நீச்சல் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யிப் பின் சியூ வாகை சூடினார். மகளிருக்கான 100 மீட்டர் எஸ்2 மல்லாந்த நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.
ஐந்து முறை பாராலிம்பிக் வெற்றியாளரான யிப், 2 நிமிடம் 15.16 வினாடிகளில் போட்டியை முடித்தார். உலக வெற்றியாளர் போட்டியில் இது இவருடைய நான்காவது தங்கப் பதக்கமாகும்.
2019ல் நடைபெற்ற முந்தைய போட்டியில் மகளிருக்கான 50 மீட்டர், 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் எஸ்2 போட்டிகளில் யிப், 30, வென்றிருந்தார்.
2010ல் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் இவர் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
அடுத்ததாக, 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் சிறந்து விளங்க இவர் கவனம் செலுத்தி வருகிறார்.

