அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு
பிரசல்ஸ்: ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறி வரும் உக்ரேனுக்கு US$1.4 பில்லியன் மதிப்புள்ள நவீன ஆயுதங்களை வழங்கி உதவ அமெரிக்காவும் உக்ரேனின் நட்பு நாடுகளும் முன்வந்துள்ளன.
பிரசல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், நட்பு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், உக்ரேனுக்கு நெடுந்தொலைவு ஏவுகணை, கப்பலில் இருந்து பாயும் ஏவுகணை உள்ளிட்ட நவீன ஆயுதங்களை விநியோகம் செய்ய முடிவுசெய்துள்ளதாக ஆஸ்டின் அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேனில் படையெடுத்ததில் இருந்து அமெரிக்கா, இதுவரை US$5.6 பில்லியன் மதிப்புள்ள தற்காப்பு உதவிகளை உக்ரேனுக்கு செய்ய கடப்பாடு கொண்டுள்ளது.
உக்ரேன் அதிபர் வெலோடிமின் ஸெலென்ஸ்கியிடம் புதன்கிழமை நடந்த 40 நிமிடச் சந்திப்பின்போது நவீன ஆயுதங்கள் குறித்து தாம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக ஸெலென்ஸ்கி, ரஷ்யாவின் முரட்டுத் தாக்குதலைச் சமாளிக்க எங்களுக்கு அதிகளவில் அதிநவீன ஆயுதங்கள் தேவைப்படுவதாக அமெரிக்காவிடமும் மேற்கத்திய நாடுகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், மேற்கத்திய நாடுகளின் ஆயுத நிபுணர்களோ, போர் நடந்துகொண்டிருக்கும்போது நவீன ஆயுதங்களை அங்கு விநியோகிப்பது என்பது கடினமான பணி என்று கூறியுள்ளனர்.
நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் வேகத்தில் அதைச் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். ஏனெனில் அதிவேகத்தில் உற்பத்தி செய்து அதை விநியோகம் செய்தாலும் அதை இயக்குவதற்கான பயிற்சியும் அளிக்க வேண்டும். அத்துடன் நவீன ஆயுதக் கிடங்குகளை எதிராளியின் தாக்குதல் இலக்கில் இருந்து பாதுகாக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேற்று முதன்முதலாக உக்ரேனுக்கு ரயில் மூலம் பயணம் மேற்கொண்டனர்.
ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்தனர்.
ஜெர்மானிய பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோன், இத்தாலியப் பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன் அமைதிப்பேச்சுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் போரை இன்னும் விரைவாக முடிப்பதற்கான விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸெலென்ஸ்கியின் ராணுவ ஆலோசகரான திரு மைகாய்லோ போடோலியாக் என்பவர், ரஷ்யாவின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க ரஷ்யாவுக்கு 1,000 பீரங்கிகளும், 300 பலதரப்பட்ட ஏவுகணைகளைப் பாய்ச்சும் ஆயுதத்துடன் 500 டாங்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படுகிறது என்று வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஆஸ்டினும் நேட்டோவும் உக்ரேனின் அவசரத் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நட்பு நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், போர் நடந்துவரும் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இரண்டு அமெரிக்கர்களை ஒரு வாரமாகக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த அமெரிக்கர்கள், உக்ரேனுக்கு ஆதரவாகப் போரில் ஈடுபட்டனர். எனவே போரின்போது ரஷ்யப் படையினரால் அவர்கள் போர்க்கைதிகளாக கைது செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

