ஜோகூர்பாரு: ஜோகூர் மன்னர் இப்ராகிம் இஸ்கந்தர், தாம் சில காலம் ஓய்வெடுக்கப் போவதாகவும், அந்தக் காலகட்டத்தில் ஜோகூர் மாநிலத்தை நிர்வகிக்க, இளவரசர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமை தான் நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத்தின் சட்டமன்றக் கூட்டத்தை நேற்றுத் தொடங்கிவைத்துப் பேசியபோது மன்னர் இப்ராகிம் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தாம் ஓய்வெடுக்கவிருக்கும் காலம் குறித்தும், இளவரசர் இஸ்மாயில் எவ்வளவு காலம் பொறுப்பு வகிப்பார் என்பது குறித்தும் மன்னர் இப்ராகிம் தெரிவிக்கவில்லை.
இளவரசர் இஸ்மாயில், முன்னதாக 2019ஆம் ஆண்டில் இதுபோல் பதவி வகித்துள்ளார்.
கடந்த ஜூன் 9ஆம் தேதி, ஜோகூர் டாருல் தாஸிம் (ஜேடிடி) காற்பந்துக் குழுவின் உரிமையாளரான இளவரசர் இஸ்மாயில், ஜோகூர் பாருவின் முன்னணி காற்பந்து சங்கமான 'ஜேடிடி'யில் தாம் வகிக்கும் பொறுப்புகள் அனைத்திலும் இருந்து விலகுவதாகவும் மற்ற பணிகளில் கவனம் செலுத்தப்போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் மன்னர் இப்ராகிம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

