செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0a945cbd-7541-4693-9fe9-1e9c826a4f11
-

ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரஷ்யக் குடியுரிமை

மாஸ்கோ: தெற்கு உக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியான கெர்சனை மீண்டும் தன்வசமாக்கிக்கொள்ள உக்ரேனியப் படைகள் போராடிவரும் வேளையில், அந்தப் பகுதியில் தன் பிடியை இறுக்கிக்கொள்ள ரஷ்யா மேலும் ஒருபடியை முன்னெடுத்து வைத்துள்ளது. கெர்சன் பகுதியில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ரஷ்யக் குடியுரிமை வழங்கப்படும் என அப்பகுதியை ஆட்சி செய்யும் பினாமி அரசாங்கம் கூறியுள்ளது.

போரில் பெற்றோரை இழந்து ஆதரவற்று இருக்கும் சிறார்களுக்கும் ரஷ்யக் குடியுரிமை வழங்கப்படும் என்று அந்த வட்டார நிர்வாகத் துணைத் தலைவர் கிரில் ஸ்ட்ரேமவ்சவ் தெரிவித்தார்.

ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளை ரஷ்யாவுடன் ஒருங்கிணைக்க மாஸ்கோ முன்னெடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது.

ரயில் கதவில் கால்சட்டை சிக்கியது விபரீதத்தில் முடிந்தது; ஆடவர் மரணம்

நியூயார்க்: ரயில் கதவில் கால்சட்டை மாட்டிக்கொண்டதால், ஆண் பயணி ஒருவர் ரயில் தடத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் நியூயார்க் நகர ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு நிகழ்ந்தது.

ரயிலிலிருந்து அவர் வெளியேறியபோது, அவருடைய கால்சட்டை கதவில் மாட்டிக்கொண்டது. ரயில் நிற்காமல் சென்றதால், பயணிகள் நடைமேடை வழியாக இழுத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் ரயில் தண்டவாளத்தில் விழுந்தார்.

30 வயதுகளில் உள்ள அந்த நபர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.

அந்த ஆடவர் தண்டவாளத்தில் விழுந்த பிறகு அந்த ரயில் நிலையத்திற்கு வந்த மற்றொரு ரயில் அவர் மீது ஏறியதா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.

அமெரிக்காவில் இடைவிடாது தொடரும் துப்பாக்கிச்சூடு; மேலும் இருவர் மரணம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வேஸ்டேவியா ஹில்ஸ் காவல்துறை கூறியது.

தனியாகச் செயல்பட்ட அந்தச் சந்தேக ஆடவர், தேவாலயத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் சுடத் தொடங்கியதாக காவல்துறை தலைவர் ஷேன் வாரே செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

வடகொரியாவில் பல குடும்பங்களுக்கு குடல் சம்பந்தப்பட்ட நோய்

பியோங்யாங்: அடையாளம் காணப்படாத குடல் சம்பந்தப்பட்ட நோயால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, 800க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மருந்துப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ நேற்று தெரிவித்தது. அப்படியென்றால், குறைந்தது 1,600 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.