சீனாவின் ஷங்காய் நகரில் ஒரு ரசாயன ஆலையில் தீ மூண்டது. இதில் குறைந்தது ஒருவர் மாண்டார். சைனோபெக் ஷங்காய் பெட்ரோல்கெமிக்கல் நிறுவனத்தின் ஆலையில் விடியற்காலை நான்கு மணியளவில் தீ மூண்டது.
ஆலையின் வெவ்வேறு பகுதிகளில் தீ எரியும் காட்சிகளை ஆளில்லா வானூர்தி படம்பிடித்தது. அந்தப் பகுதியில் கறும்புகை சூழ்ந்து வானம் கறுப்பாகத் தோன்றியதாக அவ்வட்டார வாசிகள் கூறினர். ஆலையின் சுற்று வட்டார பகுதியும் தீக்கு இரையானதாக சிலர் கூறினர்.
கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் தூரம் வரை வசிப்பவர்கள் இன்று காலை பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாகக் குறிப்பிட்டனர்.
தீயை அணைக்க 500க்கு மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ ஏற்பட்ட காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

