இலங்கையில் உணவுப் பற்றாக்குறையால் 5 மி. பேர் பாதிக்கப்படலாம்

இலங்கையில் உணவுப் பற்றாக்குறையால் 5 மி. பேர் பாதிக்கப்படலாம்

1 mins read
c1ff5002-90e2-4ad8-a78e-2c264e5c9254
படம்: ஏஃபி -
multi-img1 of 2

இலங்கையில் வரும் மாதங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இதனால் ஐந்து மில்லியன் பேர் வரை பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்படக்கூடும் என்று ஐக்கிய நாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது. ஏற்கெனவே ஐந்தில் நான்கு பேர் மூன்று வேளை சாப்பிட திண்டாடுவதாக அமைப்பு தெரிவித்தது.

உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகளுக்கு சாப்பாடு வழங்கும் உதவித்திட்டத்தை அமைப்பு தொடங்கியுள்ளது. இதனிடையே, அராசங்கத் துறை ஊழியர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு அந்நாட்டு அராசங்கம் உத்தரவிட்டுள்ளது. எரிபொருளில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டு காரணத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகள் வழங்குவோரைத் தவிர மற்ற அனைத்து பொதுத் துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கவேண்டும்.

இதோடு அனைத்து பள்ளிகளும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடப்படும். இணையம்வழி வகுப்புகள் எடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு வாரத்தில் மேலும் ஒரு நாள் ஓய்வு அளிக்க அரசாங்கம் இவ்வார தொடங்கத்தில் முடிவெடுத்திருந்தது. ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாங்களே வளர்க்க ஓய்வு நாளைப் பயன்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கப்பட்டனர்.

கொவிட்-19 கிருமித் தொற்று, அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் ஆகிய காரணங்களால் இலங்கை பொருளியல் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.