உக்ரேன் போரில் ஏற்பட்ட உயிருடற்சேதம் குறித்து ஐநா அறிக்கை
கியவ்: உக்ரேன்மீது ரஷ்யா தொடுத்துள்ள படையெடுப்பால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்து அல்லது காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 16ஆம் தேதி நிலவரப்படி, போரில் 4,509 பேர் கொல்லப்பட்டதாகவும் 5,585 பேர் காயம் அடைந்ததாகவும் ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் தெரிவித்தது. மாண்டவர்களில் 284 குழந்தைகளும் அடங்குவர்.
"பீரங்கிகள்மூலம் குண்டுமழை பொழிந்தது, ஏவுகணைகளை வீசியது, வான்வழியாகத் தாக்கியது போன்றவையே அப்பாவி மக்கள் பலரும் இறக்க காரணம்," என்று ஐநா அறிக்கை குறிப்பிட்டது.
மேலும், உயிருடற்சேத பாதிப்பு உண்மையில் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் அது கூறியது.
இதனிடையே, பாம்புத் தீவிற்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற ரஷ்யக் கப்பல் ஒன்று, தனது ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி, நீரில் மூழ்கிவிட்டதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு டென்மார்க் வழங்கியிருந்தது.
ஆயினும், ரஷ்யத் தரப்பிலிருந்து இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதே வேளையில், உக்ரேனியப் படைகளின் தாக்குதல் காரணமாக கிழக்கு உக்ரேனில் டொனட்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தினுள் இருந்து வெளியே வர முடியாமல் 77 ஊழியர்கள் சிக்கி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. சுரங்கத்திற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுவிட்டது.
ஆகஸ்ட்டில் பேச்சு நடத்த திட்டம்
ரஷ்யப் படைகள் மீதான எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாத இறுதிவாக்கில் அந்நாட்டுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உக்ரேன் திட்டமிடுகிறது. அப்போது, பேச்சுவார்த்தைக்குத் தமது நாடு இன்னும் மேம்பட்ட நிலையில் இருக்கும் என்றார் உக்ரேனின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் டேவிட் அரக்காமியா.
ரஷ்யப் பிடியில் அமெரிக்கர் இருவர்
இதற்கிடையே, உக்ரேனிய ராணுவம் சார்பில் போரில் பங்கேற்று, கடந்த வாரம் காணாமல் போன அமெரிக்கர்கள் இருவரும் ரஷ்யப் படைகளிடம் பிடிபட்டனர். அவர்கள் இடம்பெற்றுள்ள காணொளிகளை ரஷ்ய அரசாங்கத் தொலைக்காட்சி நிறுவனமான 'ஆர்டி' வெளியிட்டுள்ளது.
அலெக்சாண்டர் டுரூக், ஆண்டி ஹுய்ன் என்ற அந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் இருவரும் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

