புதுடெல்லி: தத்தம் நாடுகளின் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்களை இருதரப்பும் அங்கீகரிக்க இந்தியாவும் மலேசியாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
இது தொடர்பான உடன்பாடு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா முன்னிலையில் புதுடெல்லியில் நேற்று முன்தினம் கையெழுத்தானது.
கடந்த வாரம் இந்தியா-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சிறப்புக் கூட்டம் புதுடெல்லியில் இடம்பெற்றது. அவ்வேளையில், இந்திய, மலேசிய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பும் இடம்பெற்றது.
இந்தியா-மலேசியா கூட்டு ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை மலேசியாவில் நடத்தவும் இணக்கம் எட்டப்பட்டது.
"செம்பனை எண்ணெய், ஹைட்ரோகார்பன் துறைகள் உள்ளிட்ட வணிக, பொருளியல் உறவுகளில் கவனம் செலுத்தி, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய உந்துசக்தியை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது," என்று இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறியது.
இதனிடையே, அரசியல், பொருளியல், தற்காப்பு, எரிசக்தி, தூதரகம், கலாசாரம் சார்ந்த உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து திரு சைஃபுதீனுடன் ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டர் வழியாகத் தெரிவித்து இருக்கிறார்.

