மலாக்கா: முன்னாள் மலேசியப் பிரதமரும் பெர்சத்துக் கட்சியின் தலைவருமான முகைதீன் யாசின் (படம்), ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து 1.3 மில்லியன் ரிங்கிட் (S$410,000) பணம் பெற்றதாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் ஆதம் நேற்று முன்தினம் காலையில் சுங்கை ஊடாங் காவல் நிலையத்தில் அப்புகாரை அளித்தார்.
"அப்புகாரை எந்தத் தண்டனைச் சட்டப் பிரிவின்கீழ் வகைப்படுத்துவது என்று விரைவில் முடிவுசெய்து, அதன்பின்னர் விசாரணையைத் தொடங்குவோம்," என்று மலாக்கா தெங்கா காவல்துறை துணை ஆணையர் கிறிஸ்டஃபர் பட்டிட் தெரிவித்தார்.
அம்னோ தலைவர் அகமது ஸாகித் ஹமிடிமீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது அல்ட்ரா கிரானா நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் டேவிட் டான் என்பவர் சாட்சியம் அளித்தார். அப்போது, 2018ஆம் ஆண்டில் திரு முகைதீன் நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தபோது தமது நிறுவனம் அவருக்கு 1.3 மி. ரிங்கிட் வரை வழங்கியதாகக் கூறினார்.
ஆனால், தன்மீதான இந்தக் குற்றச்சாட்டை திரு முகைதீன் மறுத்துள்ளார்.
"அது முற்றிலும் பொய்யானது. அதை உறுதியாக மறுக்கிறேன்," என்று ஃபேஸ்புக் வழியாக திரு முகைதீன் தெரிவித்துள்ளார்.
அந்தப் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வேளையில், தாம் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஓரு சில மாதங்கள் விடுப்பு எடுத்திருந்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.
கணையத்தில் உருவான கட்டிக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திரு முகைதீன், 2018 ஆகஸ்ட்டில் சிகிச்சை முடிந்து திரும்பினார்.

