ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சமூக அளவில் முதன்முதலாக ஓமிக்ரான் துணைத் திரிபுகள் பிஏ4 மற்றும் பிஏ5 பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இன்னொரு கொவிட்-19 அலை வீசும் சாத்தியமுள்ளதால் அதனை எதிர்கொள்ள அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமியைக் காட்டிலும் இரு புதிய துணைத் திரிபுகளும் மிக அதிகமாகப் பரவக்கூடியது எனக் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் அவை ஏற்கெனவே பரவி வருகின்றன.
கடந்த மூன்று வாரங்களாக இந்தோனீசியாவில் கொவிட்-19 பரவல் ஏறுமுகத்தில் இருக்கிறது. மே மாத இறுதியில் 1,800ஆக இருந்த வாராந்திரத் தொற்று எண்ணிக்கை இவ்வாரத்தில் 3,600ஆக உயர்ந்துவிட்டது.
சென்ற புதன்கிழமை மட்டும் அங்கு புதிதாக 1,242 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரலில் இருந்து, இதுவே ஆக அதிகம் எனக் கூறப்பட்டது.
மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு, சுகாதார நெறிமுறைகளைச் சரிவரப் பின்பற்றாதது, புதிய துணைத் திரிபுகள் உள்ளிட்டவையே இந்த அதிகரிப்பிற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

