காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கும் சீக்கியக் கோவில் ஒன்றில் நேற்றுக் காலை துப்பாக்கிக்காரர்கள் நுழைந்து திடீர்த் தாக்குதலில் இறங்கினர். இதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் எழுவர் காயமுற்றதாகவும் ஆப்கான் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
துப்பாக்கிக்காரர்கள் குறைந்தது ஒரு கையெறிகுண்டை வீசியதாகவும் அக்கோவில் வளாகத்தின் ஒரு பகுதிக்குத் தீ வைத்ததாகவும் அமைச்சின் பேச்சாளர் அப்துல் நஃபி தக்கோர் கூறினார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அப்பகுதியில் ஒரு கார்குண்டு வெடித்தது என்றும் அதில் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து, கோவிலைப் பாதுகாக்க இடம்பெற்ற நடவடிக்கையில் தாக்குதல்காரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். சண்டையில் தலிபான் படைவீரர் ஒருவரும் மாண்டுபோனார்.
கோவிலுக்குள் இருந்து துப்பாக்கி சுடும் சத்தத்தையும் வெடிப்புச் சத்தத்தையும் தாம் கேட்டதாக குர்னம் சிங் என்பவர் கூறினார்.
தாக்குதல் குறித்த செய்தி பரவியதும் காபூலில் உள்ள மற்ற சீக்கியக் கோவில்களில் சில பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.
ஆப்கானில் 1970களில் ஏறக்குறைய அரை மில்லியன் சீக்கியர்கள் இருந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை வெறும் 200ஆகக் குறைந்துவிட்டது.

