ரெஹோபோத் கடற்கரை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சைக்கிளை நிறுத்தும்போது தடுமாறி கீழே விழுந்தார்.
சனிக்கிழமையன்று (18 ஜூன்) காலைநேர உடற்பயிற்சியாக டெலவேரில் உள்ள ரெஹோபோத் கடற்கரையில் அவர் சைக்கிள் ஓட்டினார்.
அப்போது தமது கடற்கரை வீட்டுக்கு அருகே காத்திருந்த சிலரைச் சந்திப்பதற்காக சைக்கிளை நிறுத்த அவர் முயற்சி செய்தார்.
ஆனால் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துவிட்டார்.
அவரை சுற்றியிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு உதவி செய்தனர்.
அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ சிகிச்சைக்கு அவசியம் இல்லை என்றும் சம்பவத்திற்குப் பிறகு வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் உட்பட சிறு கூட்டம் அவரை வரவேற்க முற்பட்டபோது அவர் கீழே விழுந்தார். 'நான் நன்றாக இருக்கிறேன்,' என்று எழுந்தவுடன் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
அன்றைய பொழுதை தமது குடும்பத்துடன் அதிபர் பைடன் செலவழித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

