ஜப்பானில் நிலநடுக்கம்
தோக்கியோ: ஜப்பானின் இஷிகா வட்டாரத்தின் மேற்கு கரையோரப் பகுதிகளில் 5.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை, ஆய்வு நிலையம் நேற்று தெரிவித்தது. பிற்பகல் 3.00 மணியளவில் பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது கூறியது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார்.
துணை அதிபராக டுட்டர்டே
மகள் பொறுப்பு ஏற்றார்
மணிலா: பிலிப்பீன்சில் பதவிக்காலம் முடியவிருக்கும் தற்போதைய அதிபரான டுட்டர்டேயின் மகள் சாரா டுட்டர்டே-கார்பியோ, 44 நேற்று நாட்டின் 15வது துணை அதிபராக ெபாறுப்பு ஏற்றுக்கொண்டார். தேர்தல் பிரசாரத்தால் பிளவுபட்ட சமூகம் ஒன்றுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த மே 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஃபெர்டினன்ட் மார்கோஸ் ஜுனியர் வெற்றி பெற்று உள்ளார்.
மலேசியாவில் கோழி இறைச்சி விநியோகம் சீராகியுள்ளது
கோலாலம்பூர்: உள்ளூரில் கோழி இறைச்சி விநியோகத்தை சீராக வைத்திருக்கும் முயற்சியில் மலேசிய அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. இதனால் உள்ளூரில் கோழி இறைச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால் கோழி இறைச்சியின் விலை தொடர்ந்து அதிகமாகக் காணப் படுகிறது.
தென்சீனாவில் மழை, வெள்ளம்
பெய்ஜிங்: தென் சீனாவில் சூறாவளியுடன் கடும் மழை பெய்து வருவதால் நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிராமப்புறங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. தென்மேற்கு சீனாவில் உள்ள குய்ஷோவின் இரண்டு மாவட்டங்களில் உள்ள சாலைகளில் ஆறு போல வெள்ளம் நிரம்பியுள்ளதால் வாகனங்களும் ஒற்றை மாடி வீடுகளும் அடித்துச் ெசல்லப்பட்டன. சில இடங்களில் அறுபது ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.

