புத்ரஜயா: மலேசியாவில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதிக்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக கொவிட்-19 தொடர்பான மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை.
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தமது டுவிட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் இதைத் தெரித்தார்.
"கொவிட்-19 தொற்றுடன் வாழப் பழகிக் கொள்ளும் நிலையை துல்லியமாக மாற்றி அமைக்கப்பட்டு எட்டப்பட்டுள்ளது. அது தரவு களின் அடிப்படையில் ஆனது. இது நமக்கு தொடர்ந்து பயன் அளிக்கும் என்று நம்புவோம்," என்றார் திரு கைரி.
மலேசியாவில் தொற்றுப் பரவல் தொடங்கியதிலிருந்து அதன் தொடர்பான 35,732 மரணங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.
நேற்றுமுன்தினம், மலேசியாவில் புதியத் தொற்றுச் சம்பவங்கள் குறைந்தன. சனிக்கிழமை 2,127 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவான நிலையில் ஞாயிற்றுக் கிழமை 1,690 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
நாட்டில் 25,944 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. 1,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம், கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனைககளில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கூடியது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் இஷாம் அப்துல்லா நேற்று கூறினார். கடந்த வாரம் மலேசியாவில் தொற்று 27.9 விழுக்காடு உயர்ந்து, 14,195 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

