கியவ்: ரஷ்யத் துருப்புகள் உக்ரேனின் கார்கிவ், டொனெட்ஸ்க் வட்டாரங்களில் தாக்குதல்களைத் தீவிரமாக்கி உள்ளன.
உக்ரேனை உறுப்பு நாடாகச் சேர்த்துக்கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் சில நாள்களில் முடிவு எடுக்க உள்ளதால், ரஷ்யா உக்ரேன்மீது அதன் தாக்கு தல்களை அதிகப்படுத்தும் என்று உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இருநாட்டுச் சண்டை அதிகமாகியுள்ள சிவியரோடொனேட்ஸ்க் நகருக்கு தெற்கே உள்ள டொஷ்கிவ்கா எனும் ஊரைக் கைப்பற்றியுள்ளதாக மாஸ்கோவின் ஆதரவுபெற்ற தீவிரவாதிகள் கூறினர். உக்ரேன் அதிகாரிகள் அதை ஒப்புக்கொண்டனர். உக்ரேனின் கிழக்கில் உள்ள டொன்பாஸ் வட்டாரத்தை ரஷ்ய துருப்புகள் கைப்பற்ற முயன்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள், உக்ரேனை அமைப்பில் சேர்த்துக்கொள்வது பற்றி வரும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் விவாதிப்பர்.
இந்நிலையில், உக்ரேன் உற்பத்தி செய்த பல மில்லியன் டன் தானியங்களை ரஷ்யா தடுத்து வைத்திருப்பது போர்க்குற்றம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வருணித்தது. தானியங்களின் ஏற்றுமதியை அனுமதிக்கும்படி அது ரஷ்யாவிடம் வலியுறுத்தியது.
அந்தத் தடையால், உலகில் உணவு விலைகள் வெகுவாக உயர்ந்துள்ளன. பல மில்லியன் பேர் பட்டினிநிலைக்குத் தள்ளப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரஷ்ய இசைக்கும் நூல்களுக்கும் தன் ஊடகங்களிலும் சில பொது இடங்களிலும் தடை விதிக்கும் மசோதாவை உக்ரேன் நாடாளுமன்றம் நேற்றுமுன்தினம் நிறைவேற்றியது.
1991க்குப் பிறகு ரஷ்ய குடிமக்கள் ஆனவர்களின் படைப்புளுக்கு இத்தடை பொருந்தும்.

