டாக்கா: வடகிழக்கு பங்ளாதேஷில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 1.6 மில்லியன் சிறுவர்கள் உள்பட குறைந்தது நான்கு மில்லியன் மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக 'யூனிசெஃப்' எனும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறுவர் நிதியம் கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிளுக்குச் சென்று சிறுவர்களைக் காப்பாற்றி உடனடியாக தண்ணீரையும் சுகாதாரப் பொருள்களையும் வழங்கும் முயற்சிகளைத் தான் எடுத்து வருவதாக 'யூனிசெஃப்' அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
"சிறுவர்களுக்குச் சுத்தமான குடிநீர் தற்போது தேவை. நீரில் பரவும் மரணம் விளைவிக்கக்கூடிய நோய்களைத் தவிர்ப்பது மிகுந்த கவலை தரும் பல அம்சங்களில் ஒன்று," என்று பங்ளாதேஷுக்கான 'யூனிசெஃப்' பிரதிநிதியான திரு ஷெல்டன் யெட் சொன்னார். ஒரு வாரத்திற்கு 80,000 குடும்பங்களுக்கு உதவக்கூடிய 400,000 நீர் சுத்திகரிப்பு மாத்திரைகளை 'யூனிசெஃப்' விநியோகித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மில்லியன் கணக்கான நீர் சுத்திகரிப்பு மாத்திரைகளை வழங்கி பங்ளாதேஷ் அரசாங்கத்திற்கு உதவ முயற்சிகளை எடுத்து வருவதாகவும் 'யூனிசெஃப்' சொன்னது. மேலும், 10,000க்கும் அதிகமான 'ஜெரி கேன்ஸ்' எனப்படும் தண்ணீர் கொள்கலன்கள், பெண்களுக்கான ஆயிரக்கணக்கான சுகாதார மேம்பாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் வட்டாரங்களில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு அவசர தேவைக்கான மருத்துவப் பொருள்களை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் 'யூனிசெஃப்' கூறியது.
பங்ளாதேஷையும் இந்தியாவையும் பாதித்துள்ள இந்த வெள்ளத்தில் குறைந்தது 116 பேர் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பங்ளாதேஷில் மாண்ட குறைந்தது 38 பேரும் அவர்களில் அடங்குவர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அண்மைக் காலமாக தெற்காசிய நாடுகள் எதிர்பாராத மோசமான பருவநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் மேலும் பயங்கரமான பேரிடர்கள் ஏற்படலாம் என்று சுற்றுப்புற வல்லுநர்கள் எச்சரித்து வந்துள்ளனர்.