செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
41000e49-3437-4d1f-bb00-6d51639f9239
-

இந்தோனீசிய அதிபர் விடோடோ உக்ரேனுக்குச் செல்வார்

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் விடோடோ இந்த மாத இறுதியில் உக்ரேனுக்கு சென்று அதிபர் ஸெலன்ஸ்கியை சந்திப்பார். இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெத்னோ மார்சுடி நேற்று இதனைத் தெரிவித்தார்.

ஜெர்மனியில் ஜி-ஏழு நாடுகளின் மாநாட்டுக்குச் செல்லும் திரு விடோடோ, பிறகு ரஷ்யா சென்று அதிபர் புட்டினைச் சந்திப்பார் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் கியவ் சென்று உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் பேச்சு நடத்திய பின்னரே ரஷ்யா சென்று அதிபர் புட்டினைச் சந்திப்பார் என்று திரு மார்சுடி நேற்று விளக்கினார்.

ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மியன்மார்

நோம் பென்: கம்போடிய தலைநகர் நோம் பென்னில் நடைபெறும் 16வது ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் மியன்மார் ராணுவ அரசாங்கத்தின் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் மியா துன் ஓ கலந்துகொண்டுள்ளார்.

அந்தக் கூட்டத்துக்கு மியன்மார் ராணுவ அரசாங்கத்தை அழைக்கக்கூடாது என்று சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், மலேசியா இந்தோனீசியா ஆகியவை ஆசியானுக்குத் தலைமை ஏற்றிருக்கும் கம்போடியாவிடம் வலியுறுத்தி வந்தன.

கடந்த ஆண்டுப் பிற்பகுதியில் ஆசியானிடம் ஒப்புக்கொண்டபடி மியன்மாரில் அமைதித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அந்நாட்டு ராணுவ அரசாங்கம் தவறிய பிறகு அதன் அதிகாரிகள் ஆசியான் கூட்டங்களுக்கு இதுவரை அழைக்கப்படவில்லை.

இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைக்கும் தாய்லாந்து

பேங்காக்: எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் தாய்லாந்து திரவ இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைக்கவுள்ளது.

மாறாக, சற்று விலை குறைவான டீசல், எரிபொருள் எண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்ய அது திட்டமிடுகிறது. ஆனால் திரவ இயற்கை எரிவாயுவின் இறக்குமதி குறைவதால் தாய்லாந்தில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

தென்கொரியாவில் குரங்கம்மை

சோல்: தென் கொரியாவில் முதல் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியிலிருந்து இஞ்சியோன் நகரில் வந்திறங்கிய தென்கொரிய குடிமகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. குரங்கம்மைத் தொற்றின் அறிகுறிகள் தென்பட்ட மற்றொரு நபருக்குத் தொற்றில்லை என்று பரிசோதனையில் தெரிய வந்தது.

தென்கொரிய நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு அமைப்பு, குரங்கம்மைக்கு எதிரான கண்காணிப்பையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் கடுமையாக்கப் போவதாகக் கூறியது. குரங்கம்மை தொற்றுக்கு எதிரான எச்சரிக்கை நிலையையும் அது உயர்த்தியது.

மயாமி நகரில் விமானத்தில் தீ

மயாமி: அமெரிக்காவின் மயாமி அனைத்துலக விமான நிலையத்தில் 126 பேர் இருந்த விமானம் தரையிறங்கியபோது தீப்பிடித்துக்கொண்டது.

நேற்றுமுன்தினம் மாலை அந்தச் சம்பவத்தில் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. டோமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ரெட் ஏர் எனும் விமானத்தின் நிறுவனம் அது. தீ அணைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழுந்துவிட்ட எரிந்த நெருப்பும் கறும்புகையும் சூழ தரையிறங்கிய விமானம், ஓடுபாதையில் சறுக்கி நின்றதை சமூக ஊடகங்களில் உள்ள காணொளிகள் காட்டின.