மரடோனோ மரணம்: எட்டுப் பேர்
மீது நீதிமன்ற விசாரணை
புவெனஸ் அய்ரிஸ்: முன்னாள் அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் டியேகோ மரடோனாவின் (படம்) மரணத்தின் தொடர்பில் எட்டு மருத்துவ ஊழியர்கள் மீது நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. அவருக்கு ஆபத்து இருப்பது தெரிந்தும் அவர்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.
நீதிமன்ற விசாரணைக்கான தேதி முடிவுசெய்யப்படவில்லை.
காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறந்த விளையாட்டாளராக சிலரால் கருதப்படும் மரடோனோ, 2020ஆம் ஆண்டு மாண்டார். அப்போது அவருக்கு 60 வயது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பராமரிப்பாளர்கள் அவரை சரிவரக் கவனித்துக்கொள்ளாமல் 'நடப்பது நடக்கட்டும்' என்ற போக்கைப் பின்பற்றியதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
உலக நீச்சல் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டார் டிரெசல்
புடாபெஸ்ட்: தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக நீச்சல் போட்டிகளில் அமெரிக்க நட்சத்திரம் கேலப் டிரெசல் (படம்) இனி பங்கேற்கமாட்டார். மருத்துவக் காரணங்களால் இவர் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.
ஆண்கள் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் உலக விருதை வென்றவர் டிரெசல். தற்போது ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் நடந்துகொண்டிருக்கும் உலக நீச்சல் போட்டிகளில் அந்தப் பிரிவில் தங்கத்தைக் கைப்பற்றினார் ருமேனியாவின் டேவிட் பொப்பொவிச்சி.
நடப்பு வெற்றியாளர் டிரெசல் பங்கேற்காததால் தங்கப் பதக்கத்தை பொப்பொவிச்சி வெல்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கெனவே 200 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார் பொப்பொவிச்சி.

