பேங்காக்: தாய்லாந்தில் முக்கிய கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. முகக்கவசம் இனி அணிய வேண்டியதில்லை. மதுபானக் கூடங்கள் இரவில் நீண்ட நேரம் செயல்படலாம்.
புதிய தொற்றுச் சம்பவங்கள் குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணி களை நம்பியிருக்கும் தாய்லாந்து எஞ்சிய கட்டுப்பாடுகளையும் நீக்கி இருக்கிறது.
நாடு முழுவதும் இனி முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது என்று பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா அறிக்கை வாயிலாகத் தெரிவித்து இருந்தார். இதன் மூலம் 2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய முகக் கவசம் முடிவுக்கு வருகிறது.
குழு நடவடிக்கைகளின்போது தொற்று ஏற்படுவதைத் தடுக்க நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மதுபானக் கூடங்கள், இரவு கேளிக்கை விடுதிகள், கரவோக்கே நிலையங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்குத் தளங்கள் வழக்கமான நேரங்களில் செயல்படலாம் என்று அறிக்கை மேலும் தெரிவித்தது.
முக்கிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இரவு நேர பொழுதுபோக்கு இடங்கள் மீண்டும் செயல்பட இம்மாத முற்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் நள்ளிரவில் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. சென்ற ஏப்ரலில் ஒரு நாள் புதிய தொற்றுச் சம்பவங்கள் 20,000லிருந்து 2,000க்கு குறைந்ததால் தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது ஆகப்பெரிய பொருளியல் நாடான தாய்லாந்தில் பயணம், வர்த்தகங்களுக்கான கட்டுப் பாடுகள் அண்மையில் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில் சுற்றுலாவை நம்பியுள்ள தாய்லாந்து, சுற்றுலா பயணிகளை மீண்டும் ஈர்ப்பதற்காக கடுமையான கொவிட்-19 கட்டுப் பாடுகளை தளர்த்தியுள்ளது.

