செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f126815b-719f-498d-aad8-dd27e60bda8f
-

தேர்தலை ஒற்றுமையுடன் இருந்து எதிர்கொள்ள அம்னோ திட்டம்

கோலாலம்பூர்: மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாக இருந்து எதிர்கொள்ள வேண்டும் எனத் தனது உறுப்பினர்களுக்கு அம்னோ கட்சி அழைப்பு விடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அம்னோ அதிர்ச்சித் தோல்வி அடைந்ததிலிருந்து உட்கட்சி பூசல்களால் அது பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், பிளவுபட்டிருக்கும் கட்சியை இணைக்கும் பணியில் கட்சித் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம்

7% எட்டும் என முன்னுரைப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இவ்வாண்டு பணவீக்கம் ஏழு விழுக்காடு எட்டும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் முன்னுரைத்துள்ளார். ஆஸ்திரேலிய மத்திய வங்கியும் அதே முன்னுரைப்பை முன்வைத்துள்ளது. பணவீக்கம் தொடர்பான பிரச்சினைகள் தணிவதற்கு முன்பு சவால்கள் கடுமையாகும் என்று திரு சால்மர்ஸ் நேற்று கூறினார். அடுத்த ஆண்டு பணவீக்கம் மிதமடையக்கூடும் என்றார் அவர். இந்நிலையில், சம்பள அதிகரிப்புக்கான தொகையை முன்மொழிய அவர் மறுத்துவிட்டார். நீடித்த நிலைத்தன்மை உள்ள சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் விரும்புவதாக அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்க இரவுவிடுதியில் குறைந்தது 17 பேர் மரணம்

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரபல இரவுவிடுதியில் குறைந்தது 17 பேர் மாண்டு கிடக்கக் காணப்பட்டனர். இதுகுறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். மாண்டவர்கள் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அணுவாயுதப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் அமெரிக்கா, ஈரான்

தெஹ்ரான்: 2015ஆம் ஆண்டு அணுவாயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை அமெரிக்காவும் ஈரானும் அடுத்த சில நாள்களில் தொடங்க இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அரசதந்திரி ஜோசஃப் போரெல் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின்போது ஐரோப்பிய ஒன்றியம் சமரசப் பேச்சாளராகச் செயல்படும் என்று அவர் கூறினார். ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு நடந்த பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் முடங்கியது.

லாஸ் ஏஞ்சலிஸ் குழுவில் இணைய கேரத் பேல் இசைவு

லாஸ் ஏஞ்சலிஸ்: ரியால் மட்ரிட் குழுவுக்காக விளையாடிய நட்சத்திரக் காற்பந்து வீரர் கேரத் பேல், லாஸ் ஏஞ்சலிஸ் குழுவில் இணைய இணக்கம் தெரிவித்துள்ளார். 32 வயது பேல் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஸ்பெயினில் விளையாடி ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தார். அவர் ஐந்து முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரியால் மட்ரிட்டுக்குப் பிறகு அவர் இங்கிலாந்தின் ஸ்பர்ஸ் குழுவில் அல்லது சொந்த நாடான வேல்சுக்குத் திரும்பி கார்டிஃப் குழுவில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய மகளிர் அணி வெற்றி

தம்புல்லா: இந்தியா-இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி 19.1 ஓவர்களில்

5 விக்கெட்டுகளுக்கு 127 ஓட்டங்கள் எடுத்து

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.