சீனாவுக்குப் பதில் தரும் 600 டாலர் பில்லியன் திட்டம்

சீனாவுக்குப் பதில் தரும் 600 டாலர் பில்லியன் திட்டம்

1 mins read

வளரும் நாடுகளுக்கு 600 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதற்கான திட்டத்தை ஜி7 அமைப்பின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

சென்ற ஆண்டின் ஜி7 தலைவர்கள் சந்திப்பில் அறிமுகமான இத்திட்டத்தை 'பிஜிஐஐ' எனும் உலகளாவிய உள்கட்டமைப்பு, முதலீட்டுப் பங்காளித்துவம் மீண்டும் அறிவித்துள்ளது.

சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்' எனும் பெரும் வர்த்தகப் பாதைத் திட்டத்திற்குப் பதிலடியாக இந்த அறிவிப்பு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இத்திட்டம் அனைவருக்கும் பலனளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

சீனாவின் பெரும் வர்த்தகப் பாதைத் திட்டத்த்தில் தொடர்புடைய நாடுகளுக்கு அளவுக்கதிகமான கடன் சேர்வதாகக் குறை கூறப்பட்டு வருகிறது.

ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஐந்தாண்டுகளில் 600 பில்லியன் டாலர் தொகையை திரட்டி நடுத்தர, குறைந்த வருமான நாடுகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவது இலக்கு.

அந்தத் தொகையில் 200 பில்லியன் டாலரை மானியங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் வழங்கப்போவதாக அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளது.

300 பில்லியன் யூரோ நிதியை வழங்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

இதற்கிடையே, ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் நடைபெறும் இவ்வாண்டின் ஜி7 மாநாட்டில் உக்ரேன் அதிபர் வொலோடமிர் ஸெலென்ஸ்கி மெய்நிகரில் கலந்துகொண்டார்.

உக்ரேன் போர் இவ்வாண்டிறுதிக்குள் முடிவடையவேண்டும் என்று அவர் ஜி7 நாடுகளின் தலைவர்களிடம் கூறியதாக சில தகவல்கள் தெரிவித்தன.

உக்ரேன் போரை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.