நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு
கொழும்பு: இலங்கையில் தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டில் எரிபொருள் விநியோகம் திடீரென கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 10ஆம் தேதிவரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் எரிபொருளை விநியோகிக்க இலங்கை அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதனால் மக்களிடையே அதிருப்தி அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பெரும் பொருளியல் நெருக்கடியை எதிர்நோக்கிவரும் இலங்கையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க அந்நாட்டின் அரசாங்கம் சிரமப்பட்டு வருகிறது.
"துறைமுகம், சுகாதாரச் சேவைகள், உணவு போக்குவரத்துக்கு பெட்ரோலும் டீசலும் தொடர்ந்து வழங்கப்படும். மற்ற துறைகளைச் சேர்ந்த அனைவரும் வீட்டிலேயே இருந்து இணையம் மூலம் சேவைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நம் நாடு முன்னெப்போதும் இல்லாத நிதி, அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது," என்றார் அவர்.
இலங்கைப் பொருளியல் முற்றிலுமாகக் கவிழ்ந்துவிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியிருந்தார். எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் வேளையில், இலங்கையால் எரிபொருளை வாங்க இயலவில்லை என்று அவர் சொன்னார்.
இறக்குமதிகளுக்குக் கட்டணம் செலுத்த உதவ அனைத்துலக பண நிதியத்துடனும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுடனும் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் மிலிண்டா மோரகோடா, இந்தியாவின் பெட்ரோலிய, இயற்கை எரிவாயு, வீடமைப்பு, நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை புதுடெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்தார். இலங்கைக்குத் தேவையான பெட்ரோல், டீசல் விநியோகத்தைப் பெறுவதற்கான சாத்தியம் குறித்து அவர்கள் கலந்தாலோசித்தனர்.

