பவேரியா, ஜெர்மனி: உலகில் முன்னணி வகிக்கும் ஏழு பொருளியல் நாடுகளும் உக்ரேனுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல்கொடுக்கும் என்று ஜெர்மானியப் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கூறியிருக்கிறார்.
ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் நடைபெற்ற ஜி7 உச்சநிலை மாநாட்டின் முடிவில் முடிவுரை ஆற்றிய அவர், உக்ரேன் மீது படையெடுத்ததற்காக ரஷ்யா செலுத்த வேண்டிய விலையை உயர்த்த ஜி7 நாடுகள் உறுதிபூண்டுள்ளதாகச் சொன்னார்.
"ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இந்தப் போரில் வெல்லக் கூடாது. இந்தப் போரின் பொருளியல், அரசியல் செலவுகளை நாங்கள் தொடர்ந்து உயர்த்துவோம். ஜனநாயக நாடாக உக்ரேன் அதன் இறையாண்மை, சுதந்திரம், எதிர்காலத்தைப் பாதுகாக்க முடிவதை நாங்கள் விரும்புகிறோம். ரஷ்யா அதன் படைகளை மீட்டுக்கொண்டு, இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அடுத்த பணி," என்று திரு ஸ்கோல்ஸ் கூறினார்.
திரு ஸ்கோல்சுக்குப் பிறகு பேசிய பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன், "ரஷ்யா இந்தப் போரில் வெல்லவும் கூடாது, வெல்லவும் முடியாது," என்று உறுதிபடக் கூறினார்.
ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நடைபெறும் நேட்டோ மாநாட்டிலும் உக்ரேன்-ரஷ்யா போர் குறித்த விவாதம் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களில் பெரும்பாலானோர், நேட்டோ மாநாட்டில் பங்கேற்க மட்ரிட் செல்வர்.
இதற்கிடையே, ஜி7 மாநாட்டில் ஜெர்மானியப் பிரதமர் ஸ்கோல்ஸ் முடிவுரை ஆற்றுவதற்கு முன்பு, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் சிலர் செய்தியாளர்களிடம் பேசினர்.
ரஷ்ய எண்ணெய் விலைக்கு வரம்பு விதிப்பதற்கான உத்தியை வகுக்க ஜி7 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர்கள் கூறினர். அப்படியென்றால், அதிகரித்து வரும் எண்ணெய் விலையால் ரஷ்யாவுக்குக் கிடைக்கும் லாபம் குறையும்.
"எண்ணெய் விலையில் வரம்பு விதிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மூன்றாம் நாடுகளுடனும் தனியார் துறையுடனும் அவசரமாக சேர்ந்து பணியாற்ற ஜி7 தலைவர்கள் அமைச்சுகளுக்கு உத்தரவிடுவர்," என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

