உலகம் முழுவதும் இதுவரை 3,400க்கும் மேற்பட்டோரிடம் குரங்கம்மை தொற்று
ஜெனிவா: கடந்த வாரம் புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,400க்கும் மேற்பட்டோரிடம் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தொற்றால் ஒருவர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட தகவல் தெரிவித்துள்ளது.
குரங்கம்மை தொற்றைப் பதிவு செய்த நாடுகளில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள்.
ஜூன் 17ஆம் தேதியிலிருந்து புதிதாக 1,310 பேரைக் குரங்கம்மை தொற்றி இருப்பது குறித்து தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக சுகாதார நிறுவனம் கூறியது.
குரங்கம்மை, உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இன்னும் பிரகடனம் செய்யப்படாவிட்டாலும், தொற்றுப் பரவல் தனக்குக் கவலை அளிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசுஸ் அண்மையில் கூறியிருந்தார்.
தோக்கியோவில் 1875க்குப் பிறகு
ஆக மோசமான வெப்பத் தாக்கம்
தோக்கியோ: ஜப்பானில் நேற்று தொடர்ந்து நான்காவது நாளாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. தலைநகர் தோக்கியோவில் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் காணாத வெப்பநிலை பதிவானது.
தோக்கியோவில் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 1 மணியளவில் வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியை எட்டியது. அங்கு தொடர்ந்து நான்கு நாள்களாக வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவாகி வந்தது.
வெப்பநிலையைப் பதிவுசெய்யும் நடைமுறை 1875ஆம் ஆண்டில் தொடங்கியதில் இருந்து ஜூன் மாதம் இவ்வளவு கடுமையாக வெப்பநிலை பதிவாகி இருப்பது இதுவே முதன்முறை.

