மலேசியாவெங்கும் பல இடங்களில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய்க்கு அந்நாட்டில் வழங்கப்படும் மானியங்கள் நாளையிலிருந்து மீட்டுக்கொள்ளப் படுகிறது.
பிளாஸ்டிக் போத்தல்களில் விற்கப்படும் சமையல் எண்ணெய்க்கு மானியம் அறவே வழங்கப்படாது.
இந்நிலையில், விலை அதிகரிப்பதற்கு முன்பாக மலேசியர்கள் சமையல் எண்ணெய்யை வாங்கி குவிப்பதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. மானியம் அகற்றப்படுதற்கு முன்பு பிளாஸ்டிக் போத்தல்களில் உள்ள சமையல் எண்ணெய் கிடைக்கவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
விலை குறைவான ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்யைப் பொதுமக்களும் சிறு வணிகர்களும் வாங்கிக் குவித்து வருகின்றனர்.
சமையல் எண்ணெய்க்காக மலேசியர்கள் திடீரென்று முண்டியடித்துச் செல்வதால் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியவில்லை என்றும் இதன் காரணமாக சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் கடைக்காரர்கள் குறைபட்டுக்கொண்டனர். புதிதாக சமையல் எண்ணெய் போத்தல்களைக் கொண்டு வந்தாலும் அவற்றைக் கண்ணிமைக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கிவிடுவதாக கடைக்காரர்கள் சிலர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர். ஒரு வாடிக்கையாளர் இவ்வளவு சமையல் எண்ணெய்தான் வாங்க முடியும் என்ற வரம்பையும் சில கடைகள் விதித்துள்ளன. அன்றாட சமையலுக்குச்
சமையல் எண்ணெய் மிகவும்
அவசியமானது என்றும் அதை வாங்கியே ஆக வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் பேசிய வாடிக்கையாளர்கள் கூறினர்.
ஏற்கெனவே மற்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை அதி
கரித்துவிட்டதால் சமையல் எண்ணெய் விலை ஏற்றம் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் அதற்கு முன்பே முடிந்தவரை பல சமையல் எண்ணெய் போத்தல்களை வாங்க விரைவதாகவும் மலேசியர்கள் பலர் தெரிவித்தனர்.
மலேசியர்களுக்கு மிகுந்த மனவுளைச்சல், நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள விலைவாசி உயர்வைச் சமாளிக்க மலேசிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு மாணவர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அவ்வாறு செய்யாவிடில், ஆர்ப்பாட்டங்கள் நடை
பெறும் என்று அவை குரல் எழுப்பி உள்ளன.

