செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
f6f36fa4-c4af-45b8-9215-d7b3988eaad0
-

அதிகரிக்கும் உணவு விலை; பிரிட்டிஷ் மக்கள் கடும் அதிருப்தி

லண்டன்: பிரிட்டனில் உணவுப்பொருள்கள் உட்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடந்த 14 ஆண்டுகள் இல்லாத அளவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பிரிட்டிஷ் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குறைந்த வருமானக் குடும்பங்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் இன்றியும் கட்டணங்களைச் செலுத்த முடியாமலும் குறைந்த வருமானக் குடும்பங்கள் தவிப்பதாக ஜோசஃப் ரவுன்ட்ரீ அறநிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடன் வாங்கும் நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வு கூறியது.

2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு தற்பொழுது பிரிட்டனில் விலை உயர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உணவுப்பொருள்களின் விலை இம்மாதம் 6 விழுக்காடு ஏற்றம் கண்டது. பிரிட்டிஷ் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் கடந்த மாதம் அறிவித்த 15 பில்லியன் பவுண்டு ($20.8 பில்லியன்) ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தால் எவ்விதப் பயனும் இல்லை என்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு அது நிவாரணம் அளிக்கவில்லை என்றும் அறநிறுவனம் கூறியது. அறநிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கூடுதல் நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடிநிலை காரணமாக பிரிட்டனில் பொருளியல் மந்தநிலை ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் அக்டோபர் மாதத்தில் மின்சாரக் கட்டணத்தை பிரிட்டன் உயர்த்த இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விலைவாசி அதிகரிப்பால் ஏற்கெனவே நிதிச் சுமையை எதிர்நோக்கும் பிரிட்டிஷ் மக்களுக்கு இது கூடுதல் சிரமத்தைத் தரும் என்று அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

துருக்கி அதிபர் சம்மதம்;

சுவீடன், ஃபின்லாந்து பெருமிதம்

மட்ரிட்: சுவீடனும் ஃபின்லாந்தும் நேட்டோவில் இணைய மும்முரம் காட்டி வருகின்றன. அந்த இரண்டு நாடுகளும் நேட்டோவில் இணைய துருக்கி முதலில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் அந்த எதிர்ப்பை துருக்கி திரும்பப் பெற்றுக்கொண்டதை அடுத்து, நேட்டோவில் இணைய சுவீடனும் ஃபின்லாந்தும் விரைகின்றன.

ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுவீடனும் ஃபின்லாந்தும் அமெரிக்கத் தலைமையின்கீழ் இயங்கும் நேட்டோவில் இணைய துருக்கி அதிபர் ரிசெப் டயீப் எர்டோவான் இணக்கம் தெரிவித்தார்.

நேட்டோவில் சேர சுவீடனுக்கும் ஃபின்லாந்துக்கும் அழைப்பு விடுப்பது குறித்து ஸ்பெயினில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டில் முடிவெடுக்கப்படும் என்று நேட்டோவின் தலைமைச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டன்பர்க் கூறினார்.

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததற்குப் பிறகு, தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் நேட்டோவில் இணைவது குறித்து சுவீடனும் ஃபின்லாந்தும் பரிசீலித்தன.

ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அகன்ற உத்திமுறையை நேட்டோ கடைப்பிடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

'அணுவாயுதக் கப்பற்படை 2030க்குள் தயாராவது சாத்தியமன்று'

கேன்பரா: ஆஸ்திரேலியாவின் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பற்படை 2030ஆம் ஆண்டுக்குள் தயாராகும் சாத்தியங்கள் மிகவும் குறைவு என்று அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.

இதனால் கடற்படை ஆற்றலில் ஆஸ்திரேலியா பின்தங்கிவிடும் அபாயம் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றுடன் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.

அதன்படி, அணுவாயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்குக் கட்டித் தர உதவி வழங்கப்படும்.