பாரிஸ்: 2015ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் நடந்த தாக்குதல்களில் பாரிஸில் உள்ள பட்டகிளான் இசையரங்கம், ஆறு மதுபானக்கூடங்கள் மற்றும் உணவகங்களிலும் பிரான்சின் விளையாட்டரங்கம் ஒன்றையும் இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உதவிபுரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மேலும் 19 பேருக்கும் நேற்று முன்தினம் பிரஞ்சு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பாரிஸ் மேயர் ஆனி ஹிடல்கோ வரவேற்றுள்ளார். "மனித இனத்திற்கு எதிராகப் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொண்டு நமது நகரத்தையும் நாட்டையும் துக்கத்தில் ஆழ்த்தினர். அவர்களை நீதியின் முன் திருத்தி பதிலடி கொடுத்திருக்கிறோம். இது நமது ஜனநாயகத்தின் வலுவைப் பறைசாற்றுகிறது. 2015 பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாரிஸ் நகரம் எப்போதும் மறவாது. நாம் எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாக அவர்கள் பக்கம் நிற்போம்," என்று மேயர் ஹிடல்கோ தெரிவித்துள்ளார்.
பட்டகிளான் தாக்குதலில் மட்டும் 90 பேர் மாண்டனர். அந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த திரு ஆர்தர் டெனோவெக்ஸ் என்பவர் "நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு நியாயமான தீர்ப்பு என்று கூறியுள்ளார். தாக்குதல் நடந்தபோது அதிபராக இருந்த திரு ஃப்ரோசுவா போலந்தும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
"குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நம் நாட்டின் சட்டம், கொள்கை குறித்து எவ்விதக் கேள்விகளும் எழாத வகையில், ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றியுள்ளது. இதற்கு அப்பால், தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் இன்றைக்கு நான் நினைவு கூர்கிறேன்," என்று உருக்கமாகக் கூறினார்.

